யார் இந்த சாதிக் பாஷா? என்ஐஏ சோதனையின் பின்னணி!
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற என்ஐஏ சோதனை குறித்த முழு பின்னணி விபரங்கள்..
மயிலாடுதுறை மாவட்டம், நீடூரை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரின் மகன் இக்காமா பாஷா என்கிற 38 வயதான சாதிக் பாஷா. இவர் சென்னையில் இக்காமா என்னும் தற்காப்பு கலை பயிற்சி மையம் நடத்தி வருவதால் அதே பெயரில் பிரபலமானார். இந்நிலையில், மயிலாடுதுறையில் அடையாளம் தெரியாத நபர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது, இதனை அடுத்து, சாதிக் பாஷா கூட்டாளிகளான மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இலந்தனகுடியைச் சேர்ந்த 58 வயதான ஜஹபர் அலி, கோவை சேர்ந்த 29 வயதான முகமது ஆஷிக், காரைக்காலை சேர்ந்த முகமது 22 வயதான இர்பான், சென்னை அயனாவரத்தை சேர்ந்த 29 வயதான ரஹ்மத் ஆகியோருடன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காரில் வந்தபோது அவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.
அப்போது துப்பாக்கியை காட்டி சாதிக் பாஷா போலீஸாரை மிரட்டினார் எனப்படுகிறது. இதையடுத்து 5 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து கார், மடிக்கணினி, கை துப்பாக்கி, தோட்டாக்கள், ஐபோன், வீடியோ பேனா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான சாதிக் பாட்சா, கிளாஃபா பார்ட்டி ஆஃப் இந்தியா, கிளாஃபா ப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஐஎஸ்ஐ (Intellectual students of India) ஆகிய அமைப்புகளை தொடங்கி, பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்தது.
இதனை அடுத்து நேற்று தமிழகத்தில் ஒன்பது இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை மற்றும் அண்ணா சாலையில் உள்ள பழைய வணிக வளாகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அண்ணாசாலையில் பழைய வணிக வளாகத்தில் உள்ள சாதிக் பாட்சா அலுவலகத்தில் சோதனை நடத்தி கொடிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்துச் சென்றனர். மேலும் குற்றம்சாட்டப்படும் சாதிக் பாஷா மக்கள் நீதி பாசறை என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்து தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த மக்கள் நீதி பாசறை தற்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
மேலும், சாதிக்பாஷா இக்காமா என்ற தற்காப்பு கலை அகாடமி நடத்தி வந்ததாகவும், அங்கு தற்காப்பு கலை கற்க வந்த பலரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதற்கு உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த 2017-ம் ஆண்டு சாதிக் பாட்சாவை கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மிரட்டியது தொடர்பாக, சென்னை வடக்கு கடற்கரை போலீஸார் ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் மத்திய உளவுத்துறை அமைப்பால் தீவிரமாக கண்காணிக்கப்படும் 72 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதிக் பாட்சாவையும் தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். சாதிக் பாஷா மீது பெரியமேடு, ஆயிரம் விளக்கு, வடக்கு கடற்கரை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை கோவை சென்னை காரைக்கால் என ஒன்பது இடங்களில் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாதிக் பாஷா உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் நேற்றைய சோதனையில் ஆறு வகையான ஆயுதங்கள், தற்காப்பு கலை பயிற்சிக்கான உபகரணங்கள் பயங்கரவாத செயல் குறித்து எழுதப்பட்ட நோட்டுகள் பாஸ்போர்ட் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கி 68 லட்சத்தையும் பறிமுதல் செய்தது. ஏற்கெனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.