நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்... மேயருக்கு எதிராக அணி திரண்ட திமுக கவுன்சிலர்கள்
மேயர் சண்.ராமநாதன் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் பல்வேறு புகார்களை மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரனிடம் அளித்தனர்.

தஞ்சாவூர்: தேர்தல் நெருங்க நெருங்க வெடித்து முற்றுகிறது எதிர்ப்பு கோஷம் எங்கு தெரியுங்களா? இதற்கு பின்னணி என்ன தெரியுங்களா? வாங்க என்னவென்று பார்ப்போம்.
தஞ்சையில் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தி.மு.க. கவுன்சிலர்களை , தி.மு.க. மாவட்ட செயலாளர் சமாதானம் செய்ய முயன்று கூட்டம் பாதியில் முடிவடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 4ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடக்கிறது. அன்று பூகம்பம் வெடிக்குமா? அல்லது எதிர்ப்புகள் புஸ்வாணம் ஆகுமா என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சியை தி.மு.க. தன் வசம் வைத்துள்ளது. இம்மாநகராட்சியில் மேயராக தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன், துணை மேயராக டாக்டர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் உள்ளனர். இதில் மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 34 பேர் தி.மு.க.வினரும், 8 பேர் அ.தி.மு.க.வினரும், 2 பேர் காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள், பா.ஜனதா, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த தலா 1 கவுன்சிலர்களும் உள்ளனர். மேலும் 2 சுயேட்சை கவுன்சிலர்கள் வெற்றி பெற்று தி.மு.கவில் இணைந்தனர். இதனால் தி.மு.க. கவுன்சிலர்கள் 36 பேர் ஆக உள்ளனர்.
இந்நிலையில் மேயர் சண்.ராமநாதன் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் பல்வேறு புகார்களை மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரனிடம் அளித்தனர். அதுமட்டுமல்ல ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் எதிர்கட்சி கவுன்சிலர்களை விட திமுக கவுன்சிலர்கள்தான் மேயர் சண்.ராமநாதனுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவர்களை மேயர் சண்.ராமநாதன் சமாதானம் செய்து கூட்டத்தை நடத்தி வந்தார். அப்போதெல்லாம் எதிர்கட்சி கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்களை யாருப்பா இவங்க நம்ம வேலையை இவங்க செய்யறாங்க என்பது போல் கேள்விக்குறி பார்வையுடன் பார்த்த சம்பவங்களும் நடந்துள்ளது.
இந்த நிலையில், மேயர் சண்.ராமநாதனுக்கு எதிரான அதிருப்தி தி.மு.க. கவுன்சிலர்கள் சில நாட்களுக்கு முன்பு, மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரனுக்கு தெரியவந்தது. உடனடியாக அவர், தி.மு.க. கவுன்சிலர்களை சமாதானம் செய்யும் விதமாக, தஞ்சை மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அதன்படி 36 தி.மு.க. கவுன்சிலர்களும் கூட்டத்திற்கு வந்தனர். அங்கு சில கெடுபிடியும் நடந்தது. கூட்டம் நடைபெறும் இடத்துக்கு யாரும் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும் கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் தஞ்சாவூர் எம்.எல்.ஏ. டி.கே.ஜி..நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்த புகார்களை, மேயர் சண். ராமநாதனிடம் மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எடுத்து கூறி, விசாரிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, மேயர் சண்.ராமநாதன் "என்னை வரச்சொல்லி அசிங்கப்படுத்துகிறீர்களா" என கூறியுள்ளார். உடனே மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், உன்னால் முடிந்ததை நீ பார், என்னால் முடிந்ததை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறி கூட்டத்தை பாதியில் முடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.
அதன் பின்னர் தி.மு.க. கவுன்சிலர்களும் கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தி.மு.க. கவுன்சிலர்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சையில் எந்த வேலையும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்களிடம் கெட்ட பெயர் அதிகமாக உள்ளது. மாதந்தோறும் நடைபெற்ற கூட்டம் தற்போது 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதனால் தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
எனவே, மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டோம், இந்த விவகாரத்தில் மாவட்ட செயலாளர் சமாதானம் செய்யும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சமாதானம் ஏற்படவில்லை. இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கு தெரியப்படுத்தி, விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றனர்.
இதுகுறித்து மேயரின் ஆதரவாளர்கள் தரப்பில் கூறுகையில், இப்போது மேயராக உள்ள சண்.ராமநாதன் கவுன்சிலராக இருந்தபோது தன்னுடைய வார்டில் ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதனால் அவருக்கு அவர் வார்டு பகுதியில் தனி மரியாதை. அதேபோல் மேயராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் மக்கள் நலத்திட்டப்பணிகளில் மும்முரம் காட்டினார். முக்கியமாக சாலைகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை பணிகள் என்று அனைத்திலும் விரைவான செயல்பாட்டை காட்டினார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படும் என்ற பேச்சு எழுந்து உலா வருகிறது. இது பிடிக்காமல் அவர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து ஒரே கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே இப்படி திட்டம் போட்டு நடந்து வருகின்றனர்.
இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம் என்றனர். இந்நிலையில்தான் இப்படி ஒரு பரபரப்பான சூழலுடன் வரும் 4ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.






















