ஒரே நாடு ஓரே தேர்தல்; 2024 தேர்தலுக்கு தயாராகுங்கள் - ஓ.எஸ்.மணியன்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீடிற்கு எடுத்துக்காட்டு மற்றும் சான்றாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன், மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகையை எப்படி ரத்துசெய்வது, ஒடுக்குவது என்று யோசிக்கும் அரசாக திமுக உள்ளது. ஒரேநாடு ஓரேதேர்தல் நடைமுறைக்கு வரும் என்பதால் 2024 தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தமிழக முன்னாள் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, சசிகலா அதிமுகவிற்கு பொதுச் செயலாளர் என்று கூறும் நிலையில் அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அதற்கு பதில் கூறுவது நீண்ட நேரம் ஆகும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து திமுக அரசு சென்ற ஆண்டு முதல் தற்போது வரை குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கவில்லை என்றும், தொடர்ந்து யூரியா தட்டுப்பாடு என்பதை விட, யூரியா இல்லை என்ற நிலை இருப்பதாகவும், எப்போது கூட்டுறவு சங்கத்திற்கு யூரியா வரும் என தெரியவில்லை என்றும் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது என்றால் அதற்கு எவரும் மாற்று கருத்து தெரிவிக்க முடியாது என கூறினார். மேலும், போதை பொருளின் சந்தை தமிழ்நாடு என்று கூறும் அளவிற்கு அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி எளிதாக போதைப் பொருள் கிடைக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதாக கூறினார். கூட்டு பாலியல் வன்கொடுமை மோசமாக நடந்து கொண்டிருப்பதாகவும் காவல் துறையை பார்த்து அச்சப்படுகிற நிலை தமிழகத்தில் இல்லையோ என அஞ்சுகிற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்