மயிலாடுதுறை: "தமிழ்நாட்டை ஒரு மாதத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் பத்தாண்டு காலம் பின்னோக்கி சென்ற தமிழ்நாட்டை ஒரு மாத காலத்தில் திமுக முன்னேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறுவை சாகுபடிக்காக இந்தாண்டு ஜீன் 12-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் தண்ணீர் திறத்துவிட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழ்நாடு அரசு டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்கால்களில் 65 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், இப்பணிகள் முழுமையாகவும் வேகமாகவும் நடைபெறுவதற்காகவும், 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது. இதற்காக 5 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மே மாதம் 28 ஆம் தேதி கனரக வாகனங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென்னலக்குடி என்ற இடத்தில் கூப்பிடுவான் ஆற்றின் கதவணை அருகே தூர்வாரும் பணிகளை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டெல்டா மாவட்டங்ளில் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் தொடங்கபட்டு நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் 80 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளது. இன்னும் ஓர் இரு தினங்களில் பணிகள் முழுமையாக முடிவடையும் என தெரிவித்தார். மேலும் பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் துரப்பண பணிகளை தொடங்க அனுமதிக்கமாட்டோம். அது தொடர்பான அறிக்கை வந்தவுடனே முதல்வர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். நாங்கள் ஆட்சியில் இல்லாதபோதே அதற்கு எதிராக குரல் கொடுத்தவர் இப்போது எதிர்க்காமல் இருப்போமா? எனவே இது போன்ற திட்டங்கள் இங்கு செயல்படுத்த விடமாட்டோம்” என்றார்.
மேலும் தொடர்ந்து பேசியவர், ”பத்தாண்டு காலம் பின்னோக்கி சென்ற தமிழ்நாட்டை ஒரு மாத காலத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம்” என்றார். விவசாய பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை நிலவுவதால் 100 நாள் வேலையில் உள்ளவர்களை விவசாய பணிகளுக்கு ஈடுபடுத்த அரசு பரிசீலிக்குமா என்ற கேள்விக்கு, பத்திரிக்கைகளில் இதுகுறித்து செய்திகள் தவறாக பதிவு செய்யமாட்டார்கள் என்றால் இது குறித்து அரசு பரிசீலிக்கும் என கூறினார்.