டெல்டா பகுதி மக்களை காப்பாற்றத்தான் நாங்கள் கட்சி நடத்துகிறோம்: செல்வப் பெருந்தகை
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் வேண்டும் என்பதை கர்நாடகாவிடம் தமிழக காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேவைப்பட்டால் காவிரி பிரச்சினையில் போராடவும் தயாராக இருக்கிறோம்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர்: காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் வேண்டும் என்பதை கர்நாடகாவிடம் தமிழக காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேவைப்பட்டால் காவிரி பிரச்சினையில் போராடவும் தயாராக இருக்கிறோம். எங்களது கட்சியைப் பொறுத்தவரை டெல்டா பகுதி மக்களை காப்பாற்ற தான் நாங்கள் கட்சியை நடத்தி வருகிறோம் என்று மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்
தஞ்சாவூரில் நேற்று மாலை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சி மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை கூறியதாவது:
பாஜகவின் எண்ணம் தமிழகத்தில் பலிக்காது
தமிழ்நாட்டில் ஏதாவது கலவரத்தை ஏற்படுத்தி உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களிடம் எடுத்துச் சென்று பாஜக, வடமாநிலங்களில் கலவரபூமியாக்கி, உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லி அரசியலில் வெற்றி பெற்றார்களோ, அதே போல் தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்த முயற்சி தமிழகத்தில் பலிக்காது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் ரகசிய பேச்சுவார்த்தை என்பது ஒரு அரசியல் கட்சி ரகசியமாக பேசுவதை, கூட்டணிக்குள் பேசுவதை, தமிழக வரலாற்றில் முதன் முதலாக கூட்டணி கட்சியாக இருந்த ஒரு கட்சியே காட்டி கொடுப்பதும், அந்த தலைவர்களை கொச்சைப் படுத்தி பேசுவதும், அவர் என்னிடம் கெஞ்சினார், கதறினார், விட்டுக் கொடுக்கச் சொன்னார் என்று சொல்வது தலைமைப் பண்புக்கு அழகல்ல. இது தான் பாஜகவின் தலைமைப் பண்பு.
தமிழ்நாட்டு மக்கள் முறியடிப்பார்கள்
வெறுப்பு அரசியலை எவ்வளவு காலத்துக்கு பேசமுடியும். இப்போது உருதுமொழியை கையில் எடுத்துள்ளார் அண்ணாமலை. ஒரு சமூகத்துக்கு எதிரான விஷமத்தனத்தை, விதைக்க தயாராகி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் அதையும் முறியடிப்பார்கள். காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் வேண்டும் என்பதை கர்நாடகாவிடம் தமிழக காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேவைப்பட்டால் காவிரி பிரச்சினையில் போராடவும் தயாராக இருக்கிறோம். எங்களது கட்சியைப் பொறுத்தவரை டெல்டா பகுதி மக்களை காப்பாற்ற தான் நாங்கள் கட்சியை நடத்தி வருகிறோம்.
காவிரியில் தண்ணீர் விட வேண்டும்
ஏற்கெனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் நீர் பங்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. கர்நாடக அரசு அடம்பிடித்தால், மத்திய அரசு தன்னிடம் உள்ள அதிகாரத்தை வைத்துக் கொண்டு அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் வேடிக்கை பார்க்கிறார்கள். மாநிலங்களுக்குள் புகுந்து அரசியல் செய்யும் வேலையை பாஜக செய்து வருகிறது. மத்திய அரசு என்பது எல்லா மாநிலங்களுக்குமான அரசாக இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட பல தீர்ப்புகளின் அடிப்படையில் காவிரியில் தண்ணீர் விட வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத் தேர்திலில் திமுக வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. அவர் சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது உண்மையான உறவு, நியாயமான உறவு, மக்கள் ஏற்றுக் கொண்ட கூட்டணி. இனி வரும் தேர்தல்களிலும் வெற்றிப் பெறப்போகிற இந்த கூட்டணி தொடரும் . இவ்வாறு அவர் கூறினார்.