யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
அதிமுக எம்எல்ஏ சுதர்சனத்தை கொலை செய்து, தமிழகத்தையே அலறவிட்ட பவாரியா கொலை கும்பல் வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு

தமிழகத்தை அலற வைத்த பவாரிய கொலை கும்பல்
நள்ளிரவு நேரம்தான் பவாரியா கும்பலின் அட்டகாசம் தொடங்கும் நேரம், தனிமையாக இருக்கும் வீடுகளை காலை நேரத்தில் நோட்டமிட்டு, இரவில் லாரிகளில் கூட்டமாக வந்திறங்கி வீட்டிற்குள் நுழைந்து சிறிவர்கள், பெரியவர்கள் என எந்தவித இரக்கமும் பார்க்காமல் கொடூர ஆயுதங்களால் அடித்து கொலை செய்து விட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பித்து செல்வார்கள். அப்படி தமிழகத்தையே அலற விட்ட கொள்ளை கும்பல் என்றால் அது பவாரிய கும்பல், 2002-2006 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்த கொள்ளை கும்பல் மீது பதிவாகியுள்ளது. 2000 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பல கொடூரமான கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.
அதிமுக எம்எல்ஏவை சுட்டுக்கொன்ற கும்பல்
இந்தக் கும்பலானது "லாரி கும்பல்" என பட்டப்பெயர் வைத்து அழைக்கப்பட்டும் வந்தது, பவாரியா கும்பல் இந்தியாவின் வடக்கு மாநிலங்களான ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி போன்ற இடங்களைச் சேர்ந்த கொள்ளை மற்றும் கொலை கும்பலாக அச்சுறுத்திக்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட இந்த கும்பல் தான் கடந்த 2005ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சில மாதங்கள் மட்டுமே அமைச்சராக இருந்த திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ சுதர்சனத்தை அவரது வீட்டிற்குள்கொடூரமாக சுட்டு கொலை செய்து பணம் நகையோடு தப்பித்து சென்றது. இதனையடுத்து தான் இந்த கொள்ளை கும்பல் மீது அரசின் பார்வை திரும்பியது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இந்த கும்பலை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். மூத்த காவல்துறை அதிகாரியான ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேடி வந்த குழு கடைசியாக ராஜஸ்தானில் இந்த கும்பல் சிக்கியது.
20 வருடங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பு
தனிப்படை தேடுதல் வேட்டையில் குற்றவாளிகள் அடுத்தடுத்து சிக்கினர். அரியானா மாநிலத்தை சேர்ந்த முக்கியக் குற்றவாளியான ஓம் பிரகாஷ் அவரது சகோதரர் ஜெகதீஷ், ஜெயிந்தர் சிங், ராகேஷ், அசோக், உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலைத் தனிப்படையினர் ராஜஸ்தானில் தட்டி தூக்கினர்.20 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 2 பேர் புழல் சிறையிலேயே மரணம் அடைந்தனர். இதனையடுத்து மீதமுள்ள குற்றவாளிகளான ஜெயில்தார் சிங் ,ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் மீதான வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தான் இன்று தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டுள்ள தீர்ப்பை சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று வழங்கவுள்ளது.





















