Vinayagar Chaturthi 2025: சிம்ம விநாயகர்... சிங்க வாகன விநாயகர்: விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனை
இந்த ஆண்டு சிம்ம விநாயகர், அன்னப்பட்சி விநாயகர், மயில்வாகன விநாயகர், எலி வாகனம் மற்றும் கிருஷ்ணர் வேடத்திலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.

தஞ்சாவூர்: வந்தாரய்யா... விநாயகர் தஞ்சாவூருக்கு வந்தாரய்யா... விதவிதமான வேடங்களில் விநாயகர் வந்து இருக்காரய்யா. தஞ்சைக்கு காகித கூழால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தாமரைப்பூ, சிங்க வாகனம், கிருஷ்ணர் வேடத்திலும் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.ரூ.200 முதல் ரூ.25 ஆயிரம் வரை சிலைகள் விற்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களின் பண்டிகைகளுள் முக்கியமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் வருகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி ஆங்காங்கே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 3-வது நாள் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தி விழாவை தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களும், பக்தர்களும் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

வீடுகளிலும் இடம் பிடிக்கும் விநாயர் சிலைகள்
மேலும் வீடுகளிலும் 1 அடி உயர விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபட்டு விட்டு பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயக பெருமானுக்கு விருப்பமான கொழுக்கட்டை, லட்டு, சுண்டல், அவல், பொறி, பழங்கள், அருகம்புல் ஆகியவற்றை படைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று அனைத்து விநாயகர் கோவில்கள், சன்னதிகளில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் விநாயகர் சிலைகளின் விற்பனையும் மும்முரம் அடைந்துள்ளன.
காகிதக்கூழால் தயாரான விநாயகர் சிலைகள்
அதன்படி பல்வேறு இடங்களில் களி மண் மற்றும் பிளாஸ்டாபாரிஸ் மாவு, காகிதக்கூழ் போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் தயார் செய்தும், சில இடங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து சிலைகளை வாங்கி வந்தும் விற்பனை செய்து வருகிறார்கள். அதன்படி தஞ்சை வெண்ணாற்றங்கரையிலும் மகளிர் சுய உதவி குழு மூலம் பல வண்ணங்களில் பல வகைகளில் காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு 1 அடி முதல் ஒன்பதரை அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்
தஞ்சை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர். இதுகுறித்து விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வரும் பூங்குழலி கூறியதாவது: நான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறேன். தற்போது காஞ்சீபுரம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் இருந்து விநாயகர் சிலைகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீரில் எளிதில் கரையும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும் காகித கூழால் இந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிம்ம விநாயகர்... அன்னப்பட்சி விநாயகர்
இந்த ஆண்டு சிம்ம விநாயகர், அன்னப்பட்சி விநாயகர், மயில்வாகன விநாயகர், எலி வாகனம் மற்றும் கிருஷ்ணர் வேடத்திலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. தற்போது ரூ.200 முதல் ரூ.25 ஆயிரம் வரையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொதுமக்களும் இதனை ஆர்வமுடன் பார்த்து வாங்கி செல்கின்றனர். தற்போது ஆட்கள் கூலி, வர்ணம், மூலப்பொருட்கள் விலை உயர்வு, லாரி வாடகை போன்றவற்றால் இந்த ஆண்டு சிலைகளின் விலையும் உயர்ந்துள்ளன என்றார்.





















