Top 10 News Headlines: 811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Dec 3rd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தல். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்.
டெல்லியில் ஓபிஎஸ்
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை கழகமாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக தகவல். கொச்சியில் இருந்து டெல்லி சென்றுள்ள அவர், இன்று பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச வாய்ப்பு.
திருவண்ணாமலை தீபம்
கார்த்திகை மாத தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும் நிலையில், சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
2027ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை இரு கட்டங்களாக நடத்த மத்திய அரசு திட்டம். முதற்கட்டமாக வீடுகளும், அதன்பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடைபெறும் என அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவிப்பு. 2026 ஏப்.- செப். வரை மாநிலங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாளில், வீடுகள் கணக்கெடுப்பு நடைபெறும். பின்னர் 2027 மார்ச் 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடக்க உள்ளன.
"811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர்"
நாடு முழுவதும் 13.88 லட்சம் பதிவு செய்யப்பட்ட அலோபதி மருத்துவர்களும், 7.52 லட்சம் ஆயுஷ் மருத்துவர்களும் உள்ளனர். 811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர் என்ற நிலை உள்ளது
- மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்
செயல்பாட்டில் இல்லாத UDAN விமான நிலையங்கள்
UDAN விமான இணைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 15 விமான நிலையங்கள் குறைந்த பயணிகள் எண்ணிக்கை காரணமாக தற்காலிகமாக மூடல். சிம்லா, பதான்கோட், ரூர்கேலா, லூதியானா உள்ளிட்ட 15 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு.
வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 ரூபாய் 12 காசுகளாக சரிந்துள்ளது.
“ஐரோப்பாவுடன் போருக்குத் தயார்” -புதின் எச்சரிக்கை!
"ரஷ்யாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால், நாங்களும் போரிட தயார்.
சமாதான பேச்சுவார்த்தை நடத்தக்கூட யாரும் இல்லாதபடி, ஐரோப்பிய நாடுகள் ஒரு முழுமையான தோல்வியை சந்திக்கும்” - ட்ரம்பின் 28 அம்ச உக்ரைன் அமைதித் திட்டத்தை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!
தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, ராய்பூரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் வென்று 1-0 என முன்னிலை வகிக்கும், கே.எல்.ராகுல் தலைமையிலான அணி இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டுகிறது.
உள்நாட்டு போட்டிகளில் கோலி
15 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஹசாரே தொடரில் மீண்டும் விளையாட உள்ளார் கோலி. டெல்லிக்காக அவர் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை.
வரும் 24ம் தேதி விஜய் ஹசாரே போட்டி தொடங்க உள்ளது.





















