கிடுகிடுவென்று விலை உயர்ந்த பூக்கள்... எதனால் இப்படி உயர்ந்தது?
கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.450-க்கு விற்பனையானது. ஆனால் இன்று விலை உயர்ந்து கிலோ ரூ.750 முதல் 1000 வரை விற்கப்பட்டது.
தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சையில் 2வது நாட்களாக பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் மேலும் விலை உயர்ந்துள்ளது.
முழு முதற்கடவுள்... கணங்களின் அதிபதி
விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது. 'கணபதி' என்ற சொல்லுக்கு 'தேவகணங்களின் தலைவன்' என்று பொருள். 'க' என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், 'ண' என்பது மோட்சம் பெறுவதையும், 'பதி' என்பது ஞான நெறியில் திளைத்து பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் 'மனோவாக்கினை கடந்த தலைவன்' என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். 'தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்' என்பதே விநாயகர் என்ற பெயருக்கு பொருள். விக்கினங்களை அகற்றுவதால் 'விக்னேஸ்வரர்' என்று பெயர். இப்படி விநாயகருக்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன.
பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம்
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், பூக்கார தெரு ஆகிய இடங்களில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்கிருந்தும் வியாபாரிகள் மொத்தமாக பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். ஏராளமான பொதுமக்களும் தங்கள் தேவைக்கேற்ப பூக்கள் வாங்கி செல்வர்.
பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருப்பதால் அந்த சமயங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். மேலும் வரத்து குறைவாக இருந்தாலும் விலை உயரும். தற்போது ஆவணி மாதம் என்பதால் நேற்று மற்றும் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. தங்கத்திலேயே விநாயகர் சிலை இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன சிலையை வாங்கி வீட்டில் பூஜை செய்து மூன்றாம் நாள் நீரில் கரைப்பது மிகச் சிறந்தது என ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையான வழிபாடு விநாயகர் வழிபாடு தான். வாசலில் இருக்கும் களிமண்ணில் விநாயகரை பிடித்து வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் அருகம்புல்லையும், எருக்கம் பூ மாலையையும் சாத்தி எளிதாக வழிபடக்கூடிய வழிபாடாகும்.
இவ்வுலகமும் உடலும் பஞ்சபூதங்களால் ஆனது தான். அதேபோல் ஒவ்வொரு தெய்வமும் பஞ்சபூதத்தின் தன்மையை கொண்டுள்ளது. அந்த வகையில் விநாயகர் மண் பஞ்சபூதத்தின் தன்மையை கொண்டவர். அதனால்தான் விநாயகர் வழிபாட்டிற்கு மண் பிள்ளையார் வழிபாடு சிறப்பாக கூறப்படுகிறது. இப்படி மண்ணால் செய்யப்பட்டு விழாவாக கொண்டாடப்பட்டு பிறகு ஆற்றில் கரைக்கப்படுவது உற்பத்தி செய்யப்பட்ட இடத்திற்கே சேர்வதை குறிக்கிறது .அதாவது” தொடக்கம் எதுவோ முடிவும் அதுவே ” என்பதே இதன் தத்துவமாக கூறப்படுகிறது. ஒவ்வொரு உயிர்களும் எங்கிருந்து வந்ததோ அங்கேயே சேர்வதையே விநாயகர் சதுர்த்தி உணர்த்திச் செல்கிறது .
மல்லிகைப்பூக்கள் விலை இரண்டு மடங்கு உயர்வு
அத்தகைய சிறப்பு மிகுந்த விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.450-க்கு விற்பனையானது. ஆனால் இன்று விலை உயர்ந்து கிலோ ரூ.750 முதல் 1000 வரை விற்கப்பட்டது. கனகாம்பரம் பூ கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் முல்லை கிலோ ரூ.750 முதல் ரூ.1000, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.200, ஆப்பிள் ரோஸ் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து பூக்கள் வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தற்போது ஆவணி மாதம் என்பதால் சுபமுகூர்த்த நாட்கள் அதிகம். இந்த நாட்களில் திருமுணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இன்று, நாளை என தொடர்ந்து 2 நாட்கள் சுபமுகூர்த்தம் மற்றும் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இருந்தாலும் மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகமாகவே உள்ளது என்றனர்.