அடுத்தது இதுதான்... தவெக தலைவர் விஜய்யின் அடுத்தக்கட்ட மூவ்: மக்கள் சந்திப்பு!!!
தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் கிட்டத்தட்ட முடிவே செய்து விட்டாராம்.

தஞ்சாவூர்: இன்னும் சில மாதங்களே உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு. அதற்காக இப்போதே அனைத்துக்கட்சிகளும் தேர்தல் பணியில் களம் இறங்கி விட்டன. இந்நிலையில் 2 மாநாட்டை நடத்திய வெற்றிக்களிப்பில் தவெக தலைவர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க வியூகம் அமைத்து வருகிறாராம்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க., நாம்தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. பிரதான கட்சிகளாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

விஜய் தலைமையிலான த.வெ.க.வும் கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணைவது என்று முடிவு செய்யவில்லை. ஜனவரிக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்வதாக தே.மு.தி.க. அறிவித்துள்ளது. சமீபத்தில் மதுரையில் தவெக நடத்திய மாநாட்டில் அண்ணன் விஜயகாந்த் என்று அக்கட்சி தலைவர் விஜய் பேசியது தேமுதிக தொண்டர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. விஜயகாந்த் குடும்பத்தினரும் விஜய் பேச்சுக்கு ஆதரவாகதான் பேசியுள்ளனர். அதனால் தேமுதிக என்ன முடிவு செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மதுரையில் 2-வது மாநாட்டை நிறைவு செய்துள்ள த.வெ.க., தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளது. அதற்கான நடவடிக்கையையும் தொடக்கியுள்ளது. வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளாராம். முக்கியமாக த.வெ.க.வின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் கிட்டத்தட்ட முடிவே செய்து விட்டாராம். இந்த ஆரம்பம் அதிரடியாக இருக்கணும் என்று கட்சி நிர்வாகிகளும் ஆர்வமாக இருக்காங்களாம்.
இந்த மக்கள் சந்திப்பை நடத்துவதற்காக மாவட்ட செயலாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறாராம். இந்நிலையில், பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் டெல்டாவையொட்டியுள்ள மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மற்ற மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டமும் நடக்க உள்ளதாம்.
அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் பேசி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்த பிறகு விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மக்கள் சந்திப்பில் தேர்தலில் ஜெயித்தால் என்ன செய்வோம்... தங்களின் கொள்கை என்ன என்பது குறித்து விஜய் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.





















