'மத்திய அரசே தோல்வியை ஒப்பு கொண்டது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’... திருமாவளவன் அறிவுறுத்தல்!
நீட் தேர்வு தோல்வியடைந்து விட்டதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர்: நீட் தேர்வு தோல்வியடைந்து விட்டதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள மறியல் பகுதியில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை, டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
"நீட் தேர்வு செயல் திட்டம் தோல்வியடைந்து விட்டது என்பதை பாஜக ஒப்புக் கொண்டு, தேர்வு எழுதி இருந்தால் போதும், தேர்ச்சி பெறத் தேவையில்லை என அறிவிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. எனவே, அகில இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.
காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பாஜக முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகிறது. காவிரி பிரச்னையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாஜக ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆனால் மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகத்துக்கு எதிராக இல்லை என காட்டிக் கொள்கிறது. இந்த இரட்டைப் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
அதிமுகவும், பாஜகவும் அரசியல் நாடகம் நடத்துகிறது. இரு கட்சிகளும் கூட்டணியை ஒரு போதும் முறித்துக் கொள்ளாது. அதிமுகவை நம்பி பாஜக உள்ளது. அதேபோல்தான் பாஜகவை நம்பி அதிமுக இருக்கிறது. இந்த இரு கட்சிகளும் தணித்து தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை. பாஜகவை அதிமுக சுமப்பதால், அக்கட்சி வாக்கு வங்கியை மேலும் இழக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்தது. இதையடுத்து நீட் தேர்வு தோல்வி என்பதை மத்திய அரசு ஒத்துக் கொண்டு விட்டது என்று அனைத்து கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் வரும் 2024ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடிவுகள், ஜூன் 2வது வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்தநிலையில், 3வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பேண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ’நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் (மருத்துவம்/ பல் மருத்துவம்) என்பது விண்ணப்பத்தாரர்களின் கலந்தாய்வில் அனைத்து வகைகளிலும் பூஜ்யமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்துதான் அனைத்து கட்சியினரும் நீட் தேர்வு தோல்வி என்பதை மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தல் வலுவாக எழுந்து வருகிறது.