வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத்திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் அங்கு ஆய்வு மேற்கொண்டார். வேளாங்கண்ணி நகரில் திருவிழாவிற்கு பொது மக்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்கள், தற்காலிக வாகனம் நிறுத்தும் இடங்கள், அரசு பேருந்துகள் நிறுத்துமிடம் ஆகியவற்றில் தேவையான அளவு மின் விளக்கு வசதிகள் குறித்தும் பார்வையிட்டார். மேலும் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ள இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளையும் உடனடியாக சீரமைக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போதிய கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு, உதவி பங்கு தந்தை ஆண்டோ ஜேசுராஜ், வேளாங்கண்ணி முதல் நிலை சிறப்பு பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
நாகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் மூன்று மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி 2வது நாளாக உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்பிற்கு ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறினர்.
நாகை மாவட்டத்தில் நாகை வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது, இரண்டு கல்லூரிகளிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக இயங்கி வந்த கல்லூரிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு உயர்கல்வி துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது உயர்கல்வி துறை கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டதிலிருந்து பேராசிரியர்கள் ஊழியர்களுக்கு மாதம்தோறும் ஊதியம், நிலுவைத் தொகை முறையாக வழங்கப்படாததோடு ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் வரை மூன்று மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மற்றும் வேதாரணியத்தில் 82 பேராசிரியர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். வகுப்பிற்கு ஆசிரியர்கள் வராத காரணத்தால் 11 மணி வரை பொறுத்து இருந்த மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற தொடங்கினர். பேராசிரியர்கள் போராட்டத்தால் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
ட்விட்டர் பக்கத்தில் தொடர
யூடியூபில் வீடியோக்களை காண