தஞ்சையில் ஊராட்சித் தலைவரின் கணவர் மீது தாக்குதல்; நடவடிக்கை கோரி விசிக புகார் மனு
தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் புதூர் ஊராட்சி தலைவரின் கணவரை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வல்லம் பஸ் ஸ்டாண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சை மாவட்டம் வல்லம் புதூர் ஊராட்சி தலைவராக உள்ளவர் சாரதா. இவரது கணவர் பழனிச்சாமி. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிச்சாமியை அதே ஊரை சேர்ந்த சிலர் சாதி பெயரை கூறி திட்டியுள்ளனர். மேலும் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வல்லம் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் தமிழன் தலைமை வகித்தார். இதில் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து வல்லம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வல்லம் புதூர் ஊராட்சி தலைவர் சாரதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
பின்னர் மேலிட பொறுப்பாளர் இடிமுரசு நிருபர்களிடம் கூறியதாவது: தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜனிடம் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டது. அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யாவிடில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் வல்லம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
இதில் மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன், மாநில துணைச் செயலாளர் சிவா தமிழ் நீதி, மாவட்ட அமைப்பாளர் தமிழ் வளவன், மாநில டாஸ்மாக் ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை, சமத்துவ வக்கீல் அணி நெப்போலியன், தொகுதி துணைச் செயலாளர் சுடர் வளவன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர முகாம் பொறுப்பாளர்கள் 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.