’மயிலாடுதுறையில் 5 மணிநேரத்திலேயே தீர்ந்து போன தடுப்பூசிகள்’- பற்றாக்குறையால் மக்கள் ஏமாற்றம்...!
’’மயிலாடுதுறை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம்களில் பல இடங்களில் 100 தடுப்பூசி மற்றும் இருந்ததால் தடுப்பூசி போடவந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்’’

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய மாநில அரசு முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி கோவாக்ஸின், கோவிஷுல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் மூலமாக வழங்கி பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ் நாட்டில் மூன்றாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அதிவேகமாக தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. அதனையடுத்து இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்த இலக்கு நிர்ணயித்து தடுப்பூசி முகாகளை அமைத்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று நடைபெறும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் குறித்து ஊராட்சி தலைவர்கள், அரசு அலுவலர்களுடனான மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக்கூட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்த தடுப்பூசியால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், கர்ப்பிணி பெண்கள், மாற்றுதிறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடடுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை 12 மணிநேரம் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் இன்று ஒரேநாளில் மட்டும் 50 ஆயிரம் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதற்காக மாவட்டம் முழுவதும் ஐந்து ஒன்றியங்களில் 406 ஊராட்சிகள், இரண்டு நகராட்சிகளில் 22 இடங்கள், 4 பேரூராட்சிகளில் 24 இடங்கள், 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 மருத்துவமனைகள் 10 நடமாடும் தடுப்பூசி குழுக்கள் என மொத்தம் 499 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இப்பணியில் 364 செவிலியர்கள், 114 மருத்துவர்கள் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 499 இடங்களுக்கு தல 100 தடுப்பூசிகள் என 50 ஆயிரம் தடுப்பூசி மற்றும் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பல கிராமங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் காலை மக்கள் ஆர்வத்துடன் படையெடுத்ததால் கையிருப்பு இருந்த 100 தடுப்பூசிகளும் விரைவில் தீர்ந்ததால் மாலை 7 மணிவரை என அறிவிக்கப்பட முகாம்களின் தடுப்பூசி இன்றி முகாம்கள் வெறிச்சோடியது. இதனால் தடுப்பூசி அச்சம் நீங்கி தடுப்பூசி செல்லுத்திக்கொள்ள வந்த மக்கள் பல பகுதிகளில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் மெகா தடுப்பூசி முகாம் என்ற பெயரில் உரிய முன்னேற்பாடுகள் இன்றி அவசரகதியில் முகாம்களை அமைத்து பொதுமக்களையும் சுகாதார பணியாளர்களையும் மாவட்ட நிர்வாகம் அலைக்கழித்து உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளன.





















