திருப்பத்தூர் பஸ் விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் பலியானார்கள். 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்: திருப்பத்தூர் அரசு பேருந்து விபத்து மற்றும் புயல் மழையினால் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் போக்குவரத்து நகர் கிளை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் அஞ்சலி கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்து நகர் கிளை முன்பு இன்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசு பேருந்து விபத்து மற்றும் புயல் மழையினால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதியை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஏஐடியுசி பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். சிஐடியு நிர்வாகி முன்னிலை ராமசாமி வகித்தார்.இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் பலியானார்கள். 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 அறிவித்துள்ளது.
அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் பத்து லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும், காயமடைந்த வர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க வேண்டும். டிட்வா புயல்-மழையினால் உயிரிழந்தவர்களுக்கும், கால்நடைகளுக்கும் உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். மேலும் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர் முப்பதாயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஓவர் டைம் டியூட்டி மற்றும் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கக் கூடாது என்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன், ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் வெ.சேவையா, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு, தொழிலாளர்கள் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ் , விசிக ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் செயலாளர் க.தமிழ்முதல்வன், என்டிஎல்எப் மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமணன், போக்குவரத்து அம்பேத்கர் சங்க நிர்வாகி சேகர், டிஎம்எம்கே முன்னாள் பொதுச்செயலாளர் ராஜேந்திரன், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி ஜீவா,தமாகா சங்க செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் சிங்காரம், மணிகண்டன், ராஜமன்னன், அறிவழகன், செந்தில் உள்ளிட்டு ஏராளமானோர் பங்கேற்றனர்.
முடிவில் விபத்தில் பலியானவர்களுக்கும், புயல் மழையினால் பலியானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.




















