அறிய முடியாத மர்மம்... கும்பகோணம் நாச்சியார்கோவில் கல்கருடன் ரகசியம்தான் என்ன?
ரகசியம் என்பதை விட பெரும் ரகசியம் என்றுதான் சொல்ல வேண்டும். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாச்சியார்கோயில் கல்கருடன். இந்த கல்கருடன் தீர்வு கண்டறிய முடியாத மர்மத்தை தன்னுள் அடக்கி உள்ளது தெரியுங்களா.
தஞ்சாவூர்: ரகசியம் என்பதை விட பெரும் ரகசியம் என்றுதான் சொல்ல வேண்டும். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாச்சியார்கோயில் கல்கருடன். இந்த கல்கருடன் தீர்வு கண்டறிய முடியாத மர்மத்தை தன்னுள் அடக்கி உள்ளது என்பது தெரியுங்களா. அது என்னவென்று தெரிந்து கொள்வோமா.
நாச்சியார்கோவில் அமைந்துள்ள கல்கருடன்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்குதான் இந்த கல்கருடன் உள்ளது.. ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி திருவிழாவின் ஒரு முக்கிய அம்சம்தான் கல்கருடன் வாகனம். மற்ற கோயில்களில் நடைபெறுகின்ற வாகன சேவைகள் போல் இது இருக்காது. உலக பிரசித்தி பெற்றதும், ஆராய்ச்சியாளர்களால் கூட பல காலமாக தீர்வு கண்டறிய முடியாத மர்மத்தை கொண்டுள்ளதுதான் இந்த கல்கருட சேவை திருவிழா. அப்படி என்ன மர்மம் என்று கேட்கிறீர்களா. தெரிந்து கொள்ளுங்கள்.
மிகவும் பிரசித்தி பெற்ற பங்குனியில் நடக்கும் திருவிழா
108 வைணவத் திருத்தலங்களில் 20வது தலமாக நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான பங்குனியில் நடைபெறும் திருவிழா வெகு பிரசித்தம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கூடுவர். மேதாவி மகரிஷியின் தவத்தை நிறைவேற்ற அவருக்கு மகளாக அவதரித்தார் மகா லட்சுமி தாயார். அவரை மானிட உருவில் வந்து ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் புரிந்துகொண்ட தலம்தான் நாச்சியார்கோயில்.
ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய கல்கருடன் சிலை
இக்கோயிலில் வஞ்சுளவல்லி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார். பல நூற்றாண்டு கால மர்மம் இங்குதான் உள்ளது. இக்கோயிலின் தனிச்சிறப்பு என்றால் இங்குள்ள ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய கல் கருடன் சிலைதான். மார்கழி, பங்குனி என இரண்டு மாதங்களில் மட்டுமே இந்த கல்கருடன் வெளியில் வருவார்.
ஆரம்பத்தில் 4 பேர்... போகப்போக 128 பேராக உயரும் எண்ணிக்கை
இக்கல்கருட பகவான் சன்னிதியிலிருந்து வெளியில் வரும்போது வெறும் 4 பேர் மட்டுமே அவரைச் சுமந்து வருவார்கள். அதற்கு பின்னர்தான் இருக்கிறது மர்மமே. ஆமாங்க. கோயில் வாசல் வரை அவரை தூக்கிச் செல்ல 8, 16 என்ற எண்ணிக்கையில் நபர்கள் 128 வரை அதிகரிக்கும். காரணம் எடை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்கிறார். இப்படி 64, 128 என்று அதிகரித்துக் கொண்டே செல்லும் எண்ணிக்கை சேவை சுற்று முடிந்து கல்கருடன் சன்னிதியை நெருங்கும் வரை சுமந்து வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து கொண்டே வந்து கடைசியாக சன்னிதியில் இறக்கி வைக்கப்படும்போது 4 பேர் மட்டுமே சுமந்து வருவார்கள்.
எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் இந்த எடை கூடும் மர்மத்தை ஆராய்ந்து பார்த்தும் இன்று வரை விடை காண முடியாதது இக்கல்கருடனின் சிறப்பு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சரி கல்கருடன் எடை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். 4 டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும். கல் கருடனின் ரகசியம் மட்டும் இன்னும் யாருமே அறிய முடியாத மர்மமாகவே உள்ளது.