திருவெறும்பூரில் அனைத்து அதிவிரைவு ரயில்களும் நிற்க நடவடிக்கை எடுப்பேன்... திருச்சி எம்.பி., துரைவைகோ உறுதி
விரைவு ரயில்களான மைசூர் எக்ஸ்பிரஸ் தவிர எதுவும் நின்று செல்லாது. இந்நிலையில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தஞ்சாவூர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து அதிவிரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்று தஞ்சாவூருக்கு வந்த எம்.பி., துரை வைகோ தெரிவித்தார்.
திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த நிலையில் திருச்சி எம்.பி துரை வைகோ அதை நிறைவேற்றி வைத்துள்ளார்.
திருவெறும்பூர் தொகுதியில் பெல் நிறுவன தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, என்.ஐ.டி , ஐ .ஐ.எம் , உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்கள், எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் , பள்ளி கல்லூரிகள், திருஎறும்பீஸ்வரர், திருநெடுங்களநாதர் கோயில்கள் அமைந்துள்ளன. மேலும் சுற்றுலாதலமான கல்லணையும்,. திருவெறும்பூர் அருகாமையில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் குறைந்த தூரங்களுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் மட்டும் நின்று செல்கிறது.
விரைவு ரயில்களான மைசூர் எக்ஸ்பிரஸ் தவிர எதுவும் நின்று செல்லாது. இந்நிலையில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்களின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக எம்.பி., துரை வைகோ நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் முதற்கட்டமாக திருச்சி-தாம்பரம் விரைவு ரயில், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இன்று (15ம் தேதி) முதல் நின்று செல்லும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.
இதையடுத்து இன்று திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு காலை 5:50-க்கு வந்து நின்ற ரயிலை எம்.பி., துரை வைகோ, ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மேளதாளங்களுடன் வரவேற்று மகிழ்ந்தனர். மேலும் ரயில் பயணிகளுக்கு எம்.பி., துரை வைகோ இனிப்புகள் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து அவரும், அவருடன் ம.தி.மு.க நிர்வாகிகளும் தஞ்சாவூர் வரை ரயிலில் பயணம் செய்தனர்.
பின்னர் அவர் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று முதல் திருச்சியில் உள்ள திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். திருவெறும்பூர் பகுதி என்பது பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ள இடம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த திருவெறும்பூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அதிவிரைவு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பலமுறை ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் எடுத்துக் கூறி அதன் விளைவாக திருச்சி தாம்பரம் அதிவிரைவு ரயில் இன்று முதல் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த ரயிலில் பயணித்தது இது திருச்சி மக்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி சிறப்பு ரயில் போலவே அனைத்து அதிவிரைவு ரயில்களும் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது ம.தி.மு.க தஞ்சை மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட துணை செயலாளர் இளங்கோவன், மாநகர செயலாளர் துரை சிங்கம், தணிக்கைக்குழு உறுப்பினர் ஸ்டாலின்பீட்டர்பாபு, ஒன்றிய செயலாளர் மாணிக்கவாசகம், மாநகர பொருளாளர் ராஜேந்திரன், சிறுபான்மைபிரிவு செயலாளர் பிரான்சிஸ், மாநகராட்சி கவுன்சிலர் சுகந்தி துரைசிங்கம், இளைஞரணி செயலாளர் நவீன், நிர்வாகிகள் பழக்கடை ராஜா, பர்மா செல்வம், வைகோ பன்னீர், மாணவரணி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





















