தஞ்சாவூர் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 15 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்பிடவும், பணியிட மாறுதல் கோரியும் 39 தலைமையாசிரியர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு கல்வித்துறை சீரமைக்கப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை, மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப் பதிவேடு, வரவு செலவு மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றை கணினி மயமாக்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வித்துறையால் எமிஸ் எனும் கல்வி மேலாண்மை தகவல் மையம் தொடங்கப்பட்டது. கல்வித்துறையின் கீழ் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் பள்ளிகள், வகுப்பு விவரங்கள் போன்றவை இந்த தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. தற்போது ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும் இந்தத் தளத்தில்தான் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு, டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி முடிக்கப்படும் என்று அறிவித்தது கல்வித்துறை. ஆனால் எமிஸ் தளத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் விண்ணப்பம் பெறும் தேதி ஜனவரி 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி வரை பணியிட மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசினர், மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்களுக்கு பிற மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டத்துக்குள்ளேயும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என தகுதிக்கேற்ப இந்த பணியிட மாறுதல் கலந்தாய்வு,தஞ்சாவூர் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 15 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்பிடவும், பணியிட மாறுதல் கோரியும் 39 தலைமையாசிரியர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் முன்னிலையில், தலைமையாசிரிகளுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று, அதில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை இந்த பணியிடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய நிலவரப்படி, அனைவரும் எமிஸ் -ஐ பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இணையதள வசதியைச் செய்து கொடுத்து வருகிறோம். எங்கெல்லாம் அந்தக் குறைபாடுகள் இருக்கின்றனவோ அதைக் கண்டறிந்து, சரிசெய்து பணிகளைச் செய்துவருகிறோம். அதனால் அந்த விஷயத்தில் யாரும் பயப்படத் தேவையில்லை. பணியிடை மாறுதல் விவகாரத்தில் ஆசிரியர்களின் பணியிடை மாறுதல். மாறுதல் கலந்தாய்வில் தகுதியின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றார்.