தஞ்சாவூர் பற்றி அறிய மரபு நடை பயணம் - சுற்றுலா பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
’’தஞ்சாவூரில் இதுவரை வெளியில் தெரியாமல் உள்ள இடங்களை சுற்றுலா பயணிகள் அறியும் வகையில் ஏற்பாடு’’
தஞ்சாவூர் நகர் பகுதியில், சுற்றுலா பயணிகள் இதுவரை காணாத, பழமையான பாரம்பரிய மிக்க இடங்களை காணும் வகையில் மரபு நடை என்ற பெயரில் திட்டம் ஏற்பாடு செய்யும் வகையில் தஞ்சாவூர் ஆட்சியர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாநகரில், பெரியகோவில், அரண்மனை வளாகம், சரஸ்வதி மஹால், நூலகம், மராட்டியர் தர்பார் மகால், போன்ற இடங்களுக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லுகின்றனர். அதனையும், தஞ்சாவூர் மாநகரில், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அறிந்திட இன்னும் பழமையான பாரம்பரிய மிக்க இடங்கள் அதிகளவில் உள்ளன. கொரோனா தொற்று விதிமுறைகள் தளர்த்திய பிறகு, நாளுக்கு நாள் வெளி மாவட்ட, உள்ளூர் சுற்றுலாவாசிகள், கூட்டம் அதிகரித்து வருகின்றது. இவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் சென்று வருவதால், தஞ்சாவூரில் உள்ள மற்ற இடங்கள் தெரியாததால், சுற்றுலாவாசிகள் சென்று விடுகிறார்கள்.
அத்தகைய இடங்களை, வெளிக்கொண்டு வரும் விதமாகவும், சுற்றுலாவாசிகளை கவரும் வகையில், மரபு நடை என்ற பெயரில், மாநகரில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்றே பார்க்கும் விதமாக, தஞ்சை சிறிய கோட்டை, நால்வர் இல்லம், தேர் நிறுத்தம், அய்யன் குளம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி மற்றும் நெற்களஞ்சியம் உள்ளிட்ட 20 இடங்களை, மேம்படுத்தி, அங்கு அதன் வரலாறு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் பலகையும் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடு நடந்து வருகின்றன. அது குறித்து நேற்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நாலவர் இல்லம், அய்யன்குளம் என சுமார் 5 கிலோ மீட்டர் துாரத்திற்கு நடந்து சென்று ஆய்வு மேற் கொண்டார்.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சாவூர் மாநகரில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட யாரும் அறிந்திட பாரம்பரிய மிக்க இடங்களை மரபு நடை என்ற பெயரில் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான வழிகாட்டி தயாரித்து சுற்றுலா பயணிகள் வரும் இடங்களில், கிடைக்க செய்யவும் அதன் மூலம் அறிந்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை வெளியில் தெரியாமல் உள்ள இடங்களை சுற்றுலாவாசிகள் பார்வையிட முடியும் என்றார். இந்த மரபு நடையில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகர ஆணையர் சரவணகுமார், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன், இந்திய தொல்லியல் துறை இளநிலை பராமரிப்பு அலுவலர் சீதாராமன், தமிழக தொல்லியல் துறை இளமின் பொறியாளர் தினேஷ், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், இன்டாக் செயலர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.