இது 16வது மாதம்... நடப்போம் நலம்பெறும் திட்டத்தில் இன்று நடைப்பயிற்சி
மாதந்தோறும் முதல் ஞாயிறன்று தொடர்ந்து தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்கத்தினர் மாநகர சுகாதார துறையுடன் இணைந்து நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்: நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் தஞ்சையில் 8 கி.மீ. தூர ஆரோக்கிய நடைப்பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் தொடங்கி வைத்தார். இது 16வது மாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தொடங்கப்பட்ட “நடப்போம் நலம்பெறுவோம் ”என்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தை மாதந்தோறும் முதல் ஞாயிறன்று தொடர்ந்து தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்கத்தினர் மாநகர சுகாதார துறையுடன் இணைந்து நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று (ஞாயிற்றுகிழமை) 16- வது மாதமாக 8 கிலோ மீட்டர் தூர ஆரோக்கிய நடைபயிற்சி மேற்கொண்டனர்.
இந்த நடைப்பயிற்சியை சத்யா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன், பேராசிரியர் பாரி ஆகியோர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாநகர நல அலுவலர் நமச்சிவாயம், செயலாளர் ஜெயக்குமார் ,கண்ணாடி குமார், ஆசிரியர் கோவிந்தராஜ்,செந்தில்குமார், கார்த்தி,ஜெயபால் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நடைபயிற்சியில் இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று புதிய பஸ் நிலையம் வரை சென்று, மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு திடலை வந்தடைந்தனர். அடுத்த மாதம் முதல் நடைப்பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டும், பரிசு வழங்கப்படும் என சங்கத்தினர் தெரிவி்த்தனர்.
தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதார துறை சார்பில் அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. நிறைவாக உடல்நலம், மனநலத்தை காக்கும் சுண்டல்,தேநீர், தண்ணீர் பாட்டில் போன்றவை குமரன் ஜுவல்லரி முருகனால் வழங்கப்பட்டது. இளங்கோ நன்றி கூறினார்.
நடைப்பயிற்சி பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது, இதில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைத்தல், எடையைக் கட்டுப்படுத்துதல், எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். மேலும், இது ஆற்றலை அதிகரிக்கவும், சர்க்கரை நோய்க்கான அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இதய நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் தசை வலிமையையும், சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கிறது. சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. நடைப்பயிற்சி செய்ய, உடலை நிமிர்ந்து வைத்து, கைகளை பக்கவாட்டில் அசைத்து, விறுவிறுப்பாக நடக்க வேண்டும். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கி, படிப்படியாக வேகத்தையும் நேரத்தையும் அதிகரிக்கலாம். உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, சௌகரியமான உடைகளை அணிந்து, காலணிகளைப் பயன்படுத்தி, தினமும் அல்லது வாரத்தில் பல முறை நடைபயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
முதலில் மெதுவாக தொடங்கி, உங்கள் உடல் வலுப்பெறும்போது வேகத்தை அதிகரிக்கவும். ஒரே நேரத்தில் நீண்டதூரம் நடப்பது கடினமாக இருந்தால், 10 நிமிட நடைகளை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யலாம். நேராக நிற்கவும், தலை நிமிர்ந்து இருக்கட்டும். தோள்களை தளர்வாக வைத்திருக்கவும், கைகளை பக்கவாட்டில் அசைத்து நடக்கலாம்.
உங்கள் இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் சற்று அதிகரிக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக நடக்க வேண்டும். நடைபயிற்சி சோர்வு அளித்தால், சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் தொடரலாம். வெறும் நடைபயிற்சியுடன், எட்டு வடிவ நடையையும் முயற்சி செய்யலாம். இது பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவும்.





















