குடவாசல் அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது - மாணவர்கள் போராட்டம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை கட்டிட வசதி இல்லாமல் குடவாசலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி செயல்பட்டு வருகிறது
குடவாசல் அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தி குடவாசல் பேருந்து நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை கட்டிட வசதி இல்லாமல் குடவாசலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடவாசல் கல்லூரிக்கு புதிய கட்டிட வசதி கட்டி தர வேண்டும் பேராசிரியர்களின் நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குடவாசலில் செயல்பட்டு வரும் கல்லூரியை கொரடாச்சேரி அருகே செல்லூர் பகுதியில் மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடவாசல் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியை அதே பகுதியில் செயல்படுத்த வேண்டும் மேலும் கல்லூரிக்கு புதிய கட்டிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
மேலும் பேராசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசல் பேருந்து நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் மாணவர்களின் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குடவாசல் அரசு கல்லூரி மாணவர்கள் இந்த கல்லூரிக்கு கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூர் என்கிற பகுதியில் இடம் பார்க்கப்பட்டு வருகின்ற 30ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது. இதற்கு மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் நன்னிலம் தொகுதிக்கு சட்டமன்ற தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட இந்த கல்லூரி குடவாசல் ஒன்றியத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் எனவும் செல்லூரில் இந்த கல்லூரி கட்டிடம் கட்டப்படவிருப்பதால் தங்களுக்கு போதிய போக்குவரத்து வசதி போன்றவை இல்லை எனவும் கூறி அந்த கல்லூரியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திருவாரூர் விளமல் பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்தனர். இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மாணவர்களை உள்ளே விடாமல் தடுத்ததால் ஆவேசம் அடைந்த மாணவர்கள் ஆட்சியர் அலுவலக கேட்டின் மீது ஏறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கு மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து தங்களை சந்தித்து உரிய விளக்கம் அளித்தால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி அங்கே அமர்ந்து போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தங்களது கோரிக்கைகளை உரிய முறையில் மனுவாக எழுதிக் கொடுக்க வேண்டுமெனவும் அதற்கு இரண்டு நாட்களில் உரிய பதில் அளிப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை மாணவர்கள் தற்காலிகமாக கைவிட்டு கலைந்துசென்றனர். மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்தப் போராட்டம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த காரணத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிற் கதவுகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மீண்டும் இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது