திருவாரூர்: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; குழந்தைகள் கைகளில் தேசிய கொடி ஏந்தி போராட்டம்
எங்கள் வீடுகளை அகற்றக்கூடாது அப்படி அகற்ற முன்வந்தால் எங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும். இல்லையேல் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![திருவாரூர்: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; குழந்தைகள் கைகளில் தேசிய கொடி ஏந்தி போராட்டம் thiruvarur near alankadu peoples encroachment against protest TNN திருவாரூர்: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; குழந்தைகள் கைகளில் தேசிய கொடி ஏந்தி போராட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/3775fcf586e5f9078e4abfef6ec71ca41660801153939185_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை கோரையாறு படித்துறை முதல் அண்ணா சிலை வரையிலான நீர்நிலைகள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் அப்பகுதியில் மாடி வீடுகள் முதல் கூரை வீடுகள் வரை மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களின் ஏராளமான கடைகள் என சுமார் 105 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அதன்படி அனைவரும் கால அவகாசம் கொடுத்து ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக் கொள்ள அதிகாரிகள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனாலும் அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசை கண்டு கொள்ளாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்த நிலையில் கடந்த 2022 மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் கடந்த 2022 மார்ச் 25ஆம் தேதி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்ற வந்தபோது குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் முதல் கட்டமாக குடியிருப்புகள் முன்பு உள்ள தடுப்புகளை மட்டும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றிவிட்டு சென்றனர். அதன் பின்னர் வழக்கு தொடர்ந்த ராஜ்குமார் மீண்டும் நீதிமன்றம் சென்றதை அடுத்து கடந்த ஜூலை 27ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற போதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி நாங்கள் ஆக்கிரமிப்புகளை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்று கூறினர். அதன்படி நான்கு வீடுகள் முன்பு இருந்த காம்பவுண்ட் சுவர்கள் மூன்று கூரை கொட்டகை, இரண்டு தகர கூரைக் கொட்டகை ஆகியவை மட்டும் அகற்றப்பட்டது.
இதனை அடுத்து வழக்கு தொடர்ந்து உள்ள ராஜ்குமார் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இதனால் அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்ற நீதிபதி கண்டிப்பாக முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். முதல் கட்டமாக மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப் போகிறோம். அதனால் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் சென்று கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் தாங்கள் குழந்தைகள் படிக்கும் ஆலங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு சுமார் 20 குழந்தைகளுடன் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, தங்கள் வீடுகளை அகற்றக்கூடாது அப்படி அகற்ற முன்வந்தால் தங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும். இல்லையேல் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தாய் மகன் இருவர் மயக்கம் அடைந்து சம்பவ இடத்தில் விழுந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து அவர்கள் இருவரையும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அரசு அதிகாரிகள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் ஆய்வாளர் ராஜேஷ் உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அனுமதி அளிக்க மாட்டோம் என கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)