(Source: ECI/ABP News/ABP Majha)
Thiruvarur: இரவில் ஆடல் பாடல்..... பகலில் பசியாற்றும் தேடல்..... அசத்தும் தம்பதியினர்..!
இரவு நேரங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆடல் பாடல் என பல்சுவை நிகழ்சிகளை நடத்தி அதன் மூலம் தங்களுக்கு வரும் சொற்ப வருமானத்தை வைத்து அன்னதானம் செய்யும் அரும்பணியை தொடங்கியுள்ளனர்.
கடந்த 20 வருடங்களாக திருவாரூரை சேர்ந்த தம்பதியினர் இணைந்து அன்னதானம் எனும் அளப்பரிய சேவையினை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் சீனிவாசபுரத்தில் வசித்து வரும் குமார் நதியா தம்பதியினர் கடந்த 20 வருடங்களாக இரவு நேரங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆடல் பாடல் என பல்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் தங்களுக்கு வரும் சொற்ப வருமானத்தை வைத்து அன்னதானம் செய்யும் அரும்பணியை தொடங்கியுள்ளனர். குறிப்பாக கடந்த எட்டு வருடங்களாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வாயிலில் இந்த தம்பதியினர் இலவசமாக மதிய உணவு வழங்கி வருகின்றனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நோயாளிகளை அருகில் இருந்து கவனித்து கொள்பவர்கள் தங்களுக்கான உணவை வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்து வர வேண்டும் இல்லையென்றால் உணவகங்களில் வாங்கி சாப்பிட வேண்டும் என்கிற நிலை இருந்து வருகிறது. கடந்த எட்டு வருடங்களாக இந்த தம்பதியினர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதிய உணவு வழங்கி வருகின்ற போதிலும் கொரோனா காலத்தில் நடைமுறைக்கு வந்த ஊரடங்கின் போது நோயாளிகளுடன் தங்கி இருந்தவர்களுக்கு குமார் நதியா தம்பதியினரின் உணவு சேவை என்பது ஒரு அருமருந்தாக இருந்தது என்று கூறலாம்.
பொதுவாக இந்த தம்பதியினருக்கு சித்திரை, வைகாசி, ஆணி, ஆடி போன்ற மாதங்களில் கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகளில் மட்டுமே கலை நிகழ்சிகள் இருக்கும். கோயில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல் என பல்சுவை நிகழ்ச்சிகளை நடத்தும் இந்த தம்பதியினருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு 5000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இவர்கள் அந்த பணத்தை சேமித்து வைத்து சோறு, சாம்பார், ரசம், மோர், பொரியல், கூட்டு என தரமான உணவினை தங்களது வீட்டில் தயாரித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கூரைக் கொட்டகையில் வைத்து தினமும் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் 350இல் இருந்து 400 நபர்கள் வரை தினமும் பசியாறுகின்றனர்.
தம்பதியினரின் இந்த சேவையை பார்த்த பொதுமக்கள் தன்னார்வலர்கள் பிறந்தநாள், நினைவு நாள் போன்றவற்றை அன்னதானம் வாயிலாக அனுசரிக்க விரும்புவர்கள் தாமாக முன்வந்து இவர்களின் மூலம் பணம் கொடுத்து அன்னதானத்திற்கு உதவி செய்கின்றனர். மேலும் இரவு முழுவதும் கலை நிகழ்ச்சி முடித்துவிட்டு ஆடிப் பாடி களைத்து வரும் இவர்கள் விடியற்காலையில் எழுந்து நானூறு நபர்களுக்கான உணவை சமைக்கின்றனர். சமைத்த உணவை ஒரு வாகனத்தின் மூலம் 5 கிலோமீட்டர் தூரம் ஏற்றி வந்து அரசு மருத்துவமனையில் தினமும் வழங்குகின்றனர். இந்த உணவினை எதிர்ப்பார்த்து நோயாளிகளுடன் இருப்பவர்கள் வரிசையில் நின்று நோயாளிகளுக்கும் தங்களுக்கும் என பாத்திரங்களில் வாங்கி செல்கின்றனர். சிலர் அங்கேயே தட்டில் வாங்கி சாப்பிடுகின்றனர்.
இந்த மதிய உணவை வழங்குவதற்கு முன் அன்றைக்கு நன்கொடை கொடுத்தவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அவர்களுக்கு மன நிம்மதியை இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்தனை செய்த பின்பு உணவை வழங்க தொடங்குகின்றனர். தினமும் இந்த அரிய சேவையை கடந்த எட்டு வருடங்களாக சளைக்காமல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த தம்பதியினர் செய்து வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவமன நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உதவியாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். வருடத்தில் நான்கு மாதங்களில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு 365 நாட்களும் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 300 பேருக்கு மதிய உணவினை இந்த தம்பதியினர் வழங்கி வருகின்றனர். பசியோடு இருக்கிற மக்களுக்கு உணவினை தரக்கூடிய பாக்கியம் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அதற்காக எவ்வளவு கலைநிகழ்ச்சியில் வேண்டுமானாலும் ஆடி பாடி உழைத்து அவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம் என்றும் எங்களுக்கு பிறகும் இதனை யாரேனும் எடுத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். விவசாயம் மற்றும் கால்நடைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் ஏழை, எளிய மக்கள் அதிகம் நிறைந்த திருவாரூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாத நபர்கள் தான் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு இந்த மதிய உணவு என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று சொன்னால் அது மிகையாகாது.