ஆய்வுக்கு சென்றவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சிலப்பதிகார கலைக்கூடத்தின் காட்சிகள்
பூம்புகாரில் உள்ள சிலப்பதிகார கலைக்கூடம் பராமரிப்பு இன்றி பாழடைந்து உள்ளதை கண்டு தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டபேரவையின் மதிப்பீட்டு குழுவினர் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில், குழு உறுப்பினர்கள் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அம்மன் கே. அர்ச்சுணன், இரா.அருள், டி.இராமச்சந்திரன், ஈ.ஆர்.ஈஸ்வரன், ஈ.பாலசுப்பிரமணியன், ராஜகுமார், செல்லூர் கே.ராஜீ, ஆகியோர் அடங்கிய குழுவினர் மயிலாடுதுறை பாதாள சாக்கடை நீரூந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். செயலற்று துருப்பிடித்து கிடந்த பம்பிங் செய்யும் இயந்திரத்தை பார்வையிட்டு பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து மூவலூர் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை பார்வையிட்டு காலதாமதமாவது ஏன் என்று அதிகாரிகளிடம் காரணங்களைக் கேட்டறிந்தனர். பின்னர் தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, எருக்கூர் நவீன அரிசிஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க காவிய நகரமான பூம்புகார் சுற்றுலா தலத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் புலனமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். சிலப்பதிகார கலைக்கூடம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம், கடற்கரை நெடுங்கல் மன்றம், உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வுசெய்தனர்.
அப்போது சிலப்பதிகார கலைக்கூட்டத்திற்கு ஆய்வு சென்ற குழுவினர் கலைக்கூடத்தின் நிலையை கண்டு ஒரு நிமிடம் கலங்கி நின்றனர். புனரமைப்பு பணிக்காக பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடந்த ஓராண்டிற்கும் மேலாக பூட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிலப்பதிகார கலைக்கூடம் முழுவதும் வவ்வால்களும், புறாக்களும் நிறைந்து அவற்றின் அவற்றின் கழிவு எச்சங்களால், பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய பண்டைய கால பொருட்கள், சிலைகள் அனைத்தும் சிதைந்து கிடந்தன, பண்டைய கால பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டிகள் உடைந்தும், சிலப்பதிகாரம் கலைக்கூடம் முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில் ஆய்வுக்கு சென்ற குழு தலைவர் டி .ஆர்.பி.ராஜா மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் தங்களது மூக்கை துணியால் கை வைத்தவாறு கலைக்கூடத்தை ஆய்வு செய்தனர். மேலும் கலைக்கூட வெளிப்புற வளாகம் முழுவதும் புதர் மண்டி காணப்பட்டதை கண்ட ராஜா அங்குள்ள அதிகாரிகளை அழைத்து புதர்களை 100 நாள் வேலை மூலமாக கூட அகற்ற முடியாதா என கடுமையாக சாடினார்.
மேலும், வரலாற்று ஆர்வலர்கள் சில சிலப்பதிகார கலைக்கூடத்தின்இந்த காட்சியினை கண்டு வருந்தியவர்கள், வரலாற்று சிறப்புமிக்க தொன்மை வாய்ந்த பொருள்களை இவ்வாறு அதன் மதிப்பு அறியாமல் வீணடித்த அதிகாரிகள் மீது கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஆய்வு முடிவடைந்தவுடன் மாலை மன்னம் பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் அதிகாரிகளுடன் சேர்ந்து குறைபாடுகள் குறித்தும், வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் மற்றும் பல துறை அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்