இயற்கை உரம், மண்புழு விற்பனை அங்காடியை திறந்து வைத்த தஞ்சை மாவட்ட கலெக்டர்
தஞ்சை அருகே விவசாயிகளுக்கு தேவையான திடக்கழிவு மேலாண்மை திட்ட இயற்கை உரம், மண்புழு உரம் மற்றும் மரக்கன்றுகள் விற்பனை மையத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.
வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை விற்பனை செய்வதற்காக இந்த விற்பனை மையம் தொடங்கப்படம்டுள்ளது. இதை திறந்து வைத்த பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் உத்தரவுக்கிணங்க வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது தினமும் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் மொத்த குப்பைகள் 4.230 டன்னில் மக்கும் குப்பை 2.540 டன் மற்றும் மக்காத குப்பை 1.040 டன் சேகரம் செய்யப்படுகிறது.
இந்த குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளொன்றுக்கு சராசரி சுமார் 200 கிலோ உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் 2021-22 ம் நிதியாண்டில் ரூ 33500க்கும், 2022-23 ம் நிதியாண்டில் ரூ.37000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அளவில் உரங்களை வளம் மீட்பு பூங்காவில் உள்ள மரக்கன்றுகளுக்கு இடப்பட்டு அதன் மூலம் விளையும் காய், கனிகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்களுக்கே வழங்கப்படுகிறது. மேற்படி உரங்களை மரம் வளர்ப்பு மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தினால் அதிகமாக மகசூல் கிடைக்கும் வளம் மீட்பு பூங்காவில் நர்சரி மூலம் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் தயார் செய்யப்படுகிறது.
உற்பத்தி செய்யப்படும் உரங்களை பற்றி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், பயன்பெறும் வகையிலும் வல்லம் பஸ்ஸ்டாண்டில் பேரூராட்சி மூலம் இயற்கை உரம், மண்புழு உரம் மற்றும் மரக்கன்றுகள் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை மையத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவைத் தந்து இயற்கை விவசாயத்தை ஊக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் பிரகந்தநாயகி, துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.