Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்தி
என் தந்தையை கொன்றவர்களை என் தங்கை மன்னித்துவிட்டாள் இன்றைக்கு நாட்டில் தேவைப்படுவது இந்த அன்பு அரசியல் தான் என்று வயநாட்டில் ப்ரியங்கா காந்திக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட ராகுல் கண்கலங்கி பேசியது தற்போது கவனம் பெற்று வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமனற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் சட்டப்படி ஏதாவது ஒரு தொகுதிக்கு மட்டும் தான் எம்.பியாக இருக்க முடியும் என்பதால் வயநாடு எம்.பி பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் ராகுல் தங்கை ப்ரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தல் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி நடைப்பெறுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் நேற்று வயநாடு சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தற்போது நாட்டில் நடக்கும் பெரிய போராட்டமே நமது அரசியலமைப்பு சட்டத்தை பாதுக்காக்க நடக்கும் போராட்டம் தான், நமக்கு கிடைக்கும் பாதுக்காப்பு உள்ளிட்டவைகளுக்கு முழுக்காரணமே நமது அரசியலமைப்பு சட்டம் தான். நமது அரசியலமைப்பு சட்டம் வெறுப்பு மற்றும் கோபத்துடன் எழுதப்பட்டது கிடையாது. சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நீண்ட வருடங்கள் போராடி சிறையில் இருந்தவர்கள் அன்பு மற்றும் பாசத்துடன் எழுதியது தான் நமது அரசியலமைப்பு.
இப்போது நமது நாட்டில் நிலவுவது அன்புக்கும் வெறுப்புக்கும் இடையேயான போராட்டம், நமது நாட்டு மக்கள் வெறுப்புகளை பரப்புவோரை கண்டுக்கொள்ளாமல் இரக்கம், நம்பிக்கையை ஏற்றுக்கொள்கிறார்கள். என் தங்கை ப்ரியங்கா அன்பும் பாசமும் நிறைந்தவர், அவரிடம் எந்த அளவிற்கு துணிச்சல் உள்ளதோ அந்த அளவுக்கு அன்பும் பாசமும் உள்ளது. என் தந்தையை கொன்றவர்களில் ஒருவரை என் தங்கை நேரில் சந்தித்து பேசினாள், அவரையும் என் தங்கை மன்னித்துவிட்டாள் இன்றைக்கு நாட்டில் தேவைப்படுவது இந்த அன்பு அரசியல் தான். இது தான் இந்தியாவுக்கான அரசியல் அதை செய்து காட்டியது என் தங்கை ப்ரியாங்கா தான் என்று ராகுல் பேசினார்.