தஞ்சாவூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பிலிருந்த 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்தது
’’மரத்தில் ஒரு புறத்தில் இருந்த கிளைகள், வேர்கள் அகற்றப்பட்டதால், மறுபுறத்தில் சுமை அதிகமாகிவிட்டதால், மரத்தின் ஒருபுறத்தில் பாரம் தாங்காமல் வேரோடு சாய்ந்துவிட்டது’’
தஞ்சாவூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்த 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்தது. தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்த 100 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழைமையான ஆலமரம் பலத்த மழையால் வேரோடு சாய்ந்தது. தஞ்சாவூர் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாலையோரம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமையான ஆலமரம் இருந்தது. படர்ந்து விரிந்து காணப்பட்ட இந்த மரம் அப்பகுதியில் மிகப் பெரிய நிழலாகவும், கோடை காலத்தில் இதமாகவும் இருந்து வந்தது. இந்த ஆலமரம் அப்பகுதிக்கு அடையாளமாக இருப்பதால், ஆலமரத்தடி பேருந்து நிறுத்தம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆலமரத்தால் அப்பகுதி பெயர் பெற்று வந்தது.
இந்நிலையில், சாலை அகலப்படுத்தின் காரணமாக சாலையோரம் இருந்த ஆலமரத்தின் கிளைகள், வேர்கள் அகற்றப்பட்டன. இவை படிப்படியாக அகற்றப்பட்டு வந்ததால், ஒரு புறத்தில் கிளைகளும், வேர்களும், விழுதுகளும் இன்றி இருந்து வந்தது. இதனால், இந்த மரம் தந்த நிழல் பரப்பும் குறைந்துவிட்டது. மறுபுறத்தில் மட்டுமே கிளைகளும், வேர்களும் மட்டுமே இருந்தது. இந்நிலையில், தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வந்தது. தொடர் மழையால் இந்த ஆலமரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. சாலையில் விழாமல் மறுபுறம் சாய்ந்ததால், போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. ஆனால், ஆலமரத்தை ஒட்டியிருந்த தேநீர் கடை, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை சேதமடைந்தன. அப்போது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், மின்சார விநியோகம் தடைப்பட்டது.
காயமடைந்தவர்கள் அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினரும், தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்தினரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தஞ்சாவூரில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலமரம் பெயர் பெற்றதாகும். இந்த ஆலமரம் படர்ந்து விரிந்து இருந்ததால், மரத்தடியின் கீழ் பொது மக்கள் இளைப்பாரவும், வாகனங்கள் நிறுத்தி, ஒய்வு எடுத்து வந்தனர். அதன் பின்னர், மரத்தடியின் கீழ் கடைகள் அமைத்தனர்.
அவர்கள், ஆலமரத்தின் விழுதுகள் விழாமல் இருப்பதற்காக, விழுதுகளை வெட்டி வந்தனர். இதனால் தாய் மரத்தின் தன்மை தளர்ந்து விட்டது. மேலும், சாலை விரிவாக்கத்தின் போது, இந்த மரத்தில் ஒரு புறத்தில் இருந்த கிளைகள், வேர்கள் அகற்றப்பட்டதால், மறுபுறத்தில் சுமை அதிகமாகிவிட்டதால், மரத்தின் ஒருபுறத்தில் பாரம் தாங்காமல் வேரோடு சாய்ந்துவிட்டது. இது போன்ற மிகவும் பழமையானதும், தஞ்சாவூருக்கு பெருமை சேர்த்த ஆலமரத்தை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததால், வேருடன் சாய்ந்து விட்டது. ஆலமரம் சாலையோரம் விழுந்திருந்தால், பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்றனர்.