தன்னம்பிக்கை, திறமை, முயற்சியால் சாதனை மேல் சாதனை படைக்கும் தஞ்சை மாணவர்..!
தன்னம்பிக்கை, திறமையால் கால்பந்து போட்டியில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறார் தஞ்சை பாலாஜி நகர் மாணவர் அஸ்வின் ராஜ்
தன்னம்பிக்கைதான் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகும். திறமை மட்டும் இருந்தால் போதாது. அனைத்து காரியங்களும் கை கூடாது. திறமையுடன் கூடிய நம்பிக்கைதான் வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். பெரும்பாலான சாதனைகள் சுலபமாக நடைபெற்று விட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமலேயே போய் விடும். தன்னம்பிக்கை, திறமை, முயற்சி மூன்றும் இணைந்து இருப்பதே சாதனையை நோக்கி அழைத்துச் செல்லும் வழிப்பாதை.
அதேபோல் தன்னம்பிக்கை, திறமையால் கால்பந்து போட்டியில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறார் தஞ்சை பாலாஜி நகர் மாணவர் அஸ்வின் ராஜ் (14). இவரது தந்தை ஆனந்தராஜ், தாய் பரமேஸ்வரி. கால்பந்து போட்டிகளில் அதீத ஆர்வம். மாவட்ட போட்டிகள் முதல் மண்டல போட்டிகள் வரை கலந்துகொண்டு வெற்றிக் கோப்பைகளை பெற்று சாதித்துள்ளார். தற்போது மாநில போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இதற்கு பயிற்சி பெறுவதற்காக அரசு விளையாட்டு விடுதியில் சேர்ந்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் அஸ்வின் ராஜ் மண்டலம் சார்பாக நடைபெற்ற பல்வேறு கால்பந்து போட்டிகளில் பெஸ்ட் டிபன்ட்டராக ஏராளமான விருதுகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக கால்பந்து போட்டியில் பயிற்சி பெற்று அதில் ஆர்வம் அதிகமாக இருப்பதால் இதில் மேலும் சாதனைகள் படைக்க பிரதியேகமாக பயிற்சி கொடுக்கும் அரசு விளையாட்டு விடுதியில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்காலக்கட்டத்தில் செல்போனில் உள்ள கேம்ஸை விளையாட ஆர்வம் காட்டதான் மாணவர்களுக்கு அதிக விருப்பமாக உள்ளது. உடல் திறனையும், ஓடியாடி விளையாடும் விளையாட்டுக்களில் ஆர்வம் இல்லாமல் உள்ளது. இத்தலைமுறை மாணவர்கள் உடல் அளவில் ஆக்டிவாக செயல்பட பாரம்பரிய கலைகளும், விளையாட்டும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்துதான் விளையாட்டு, தற்காப்பு கலைகளை மாணவர் அஸ்வின் கற்றுக் கொண்டு உற்சாகமாய் மாற தாய் பரமேஸ்வரி ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துள்ளார்.
கால்பந்து போட்டிக்கு மனதை ஒரு நிலைப்படுத்தவும், உடல் ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமான ஒன்று என்பதால் தன் மகனுக்கு உள்ள ஆர்வத்தை சரியான முறையில் கொண்டு செல்ல மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள தூண்டுதல் கொடுத்துள்ளார். தாயின் அறிவுரையின் பேரில் தற்காப்பு கலையை கற்றுக் கொண்ட மாணவர் அஸ்வின் ராஜ் இன்று சாதனை மேல் சாதனை செய்துள்ளார். கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கராத்தேவில் இவர் பெற்றுள்ள பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றன மாவட்ட போட்டி முதல் சர்வதேச கராத்தே போட்டிகளில் ஏராளமான வெற்றிகளை குவித்துள்ளார். கராத்தே போட்டியில் 18 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கல பதக்கங்கள் குவித்துள்ளார். சிலம்பத்திலும் மண்டல போட்டி முதல் தேசிய போட்டிக்கு இரண்டு முறை கலந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனதை ஒருநிலைப்படுத்தும் தற்காப்பு கலைகளை கற்ற மாணவர் அஸ்வின்ராஜ்க்கு கால்பந்து போட்டிகளில் பங்கேற்பது மிகவும் எளிதாக அமைந்து விட்டது என்று அவரது தாய் பரமேஸ்வரி தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: எனது மகனுக்கு சிறுவயது முதலே கால்பந்து போட்டியில் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. அதற்காக பயிற்சி பெறுவதற்கு முன் அவனுக்கு தன்னம்பிக்கையும், ஒருமித்த மனநிலையும் உருவாக வேண்டும் என்பதற்காக தற்காப்பு கலைகள் கற்க தஞ்சை பயிற்சியாளர் சென்சாய் ராஜேஷ் கண்ணாவிடம் சேர்த்து விட்டேன்.
இன்று அதில் பல்வேறு சாதனைகள் செய்ய என் மகனுக்கு அவர் சிறப்பாக பயிற்சி அளித்துள்ளார். வீட்டுக்கு அஸ்திவாரம் எப்படி வலுவாக இருக்கவேண்டுமோ அதேபோல் தற்காப்பு கலையில் வலு பெற்ற அவன் இன்று கால்பந்து போட்டியில் பெஸ்ட் டிபன்ட்டராக விருதுகளை குவித்துள்ளான். கால்பந்து போட்டிகளில் சிறப்பான வெற்றி பெற பயிற்சியாளர் அசோக் மணிகண்டன் மற்றும் சாமிநாதன் ஆகியோர் சிறப்பான பயிற்சி அளிக்கின்றனர். தற்காப்பு கலை பயிற்சியாளர் மற்றும் கால்பந்து பயிற்சியாளர்களால் என் மகன் பெறும் வெற்றிகள் அவனது வாழ்க்கைக்கு சரியான அஸ்திவாரமாக உள்ளது என்று தெரிவித்தார்.