மனதை மயக்கும் தஞ்சாவூர் வீணைகள்...வெளிநாடுகளுக்கும் பறக்கிறது..!
மனதை மயக்கும்… நம்மையே மறக்கச் செய்யும் ஒன்று இசை. அதிலும் வீணையின் நாத கம்பிகளில் இருந்து எழும் இனிய இசைக்கு நம்மை அறியாமலேயே மயங்கி விடுவோம். மனதை மயக்கும் தஞ்சாவூர் வீணைகள், வெளிநாடுகளுக்கும் பறக்கிறது.
மனதை மயக்கும்… நம்மையே மறக்கச் செய்யும் ஒன்று இசை. அதிலும் வீணையின் நாத கம்பிகளில் இருந்து எழும் இனிய இசைக்கு நம்மை அறியாமலேயே மயங்கி விடுவோம். பழங்காலம் முதல் வீணை வாசிக்கப்படுகிறது. மகாபாரதம், பாகவதம் மற்றும் புராண நூல்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது இதன் தோற்றம், அமைப்பும் விதவிதமாக இருந்துள்ளது. மீன், படகு போன்ற வடிவங்களில் கூட வீணை செய்யப்பட்டுள்ளது. இதை ருத்ர வீணை என்று அழைக்கப்பட்டுள்ளது. 17ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னர் ரகுநாத நாயக்கர் காலத்தில்தான் வீணை இப்போது நாம் காணும் வடிவை அடைந்துள்ளது. வீணையின் இடது புறம் யாழி முக வடிவில் இருக்கும். கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப் பெற்ற வீணை என்றால் அது தஞ்சாவூர் வீணைதான். இதை சரஸ்வதி வீணை அல்லது ரகுநாத வீணை என்று அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூரில் செய்யப்படும் வீணைக்கு என்று தனித்தன்மை உள்ளது. இதனால்தான் மத்திய அரசு 2010 ஆம் ஆண்டில் தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 40 வயதான பலா மரத்தின் அடி மரம் தஞ்சாவூர் வீணை செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதன் எடை 7 கிலோ முதல் 8 கிலோ வரை இருக்கும். எடைக் குறைவான வீணை என்பதே இதன் தனிச் சிறப்பு.
இந்த வீணையில் நடுவில் உள்ள பகுதி தண்டி என்றும்இ வலது பக்கம் குடமும், மற்றொரு முனையில் (இடது புறம்) யாழி முகமும் அமைந்திருக்கும். யாழி முகத்திற்கு அருகில் உருண்டை வடிவில் அமைந்திருப்பது சுரைக்காய் எனப்படுகிறது.
வீணையின் குடம் செய்ய பலாமரத்தைக் குடைந்து ஒரு பானையின் தடிமன் அளவுக்குச் செய்கின்றனர். இதன் உள்ளே வெற்றிடமாக இருக்கும். இதன் மேல் பலகையில் பல ஒலித்துளைகள் அமைக்கப்படுகிறது. வீணையின் மிக முக்கியமான பாகமே பானை போன்ற குடம்தான். கம்பிகளை மீட்டும்போது இக்குடத்தில் உள்ள துளைகள் வழியாகத்தான் இசை வெளியாகிறது. குடம் மரத்தில் இருப்பதால் மனதை கவரும் இசை நேர்த்தியாக வெளிப்படுகிறது.
வீணை மேல் பலகையில் மாடச்சட்டம், பிரடைகள், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், மெட்டுகள், குதிரைகள், லங்கர், நாகபாசம், தந்திகள் என பல நுட்பமான பாகங்களும் பொருத்துகின்றனர். ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாழி முகம் ஆகிய பாகங்கள் செய்யப்பட்ட வீணை ஏகாந்த வீணை என்று அழைக்கப்படுகிறது. ஒரே மரத்துண்டில் பாகங்கள் தனித்தனியாகச் செய்து ஒன்றாகப் பொருத்துவது ஒட்டு வீணையாகும். இதில் மரத்தை அறுப்பதற்கு மட்டுமே இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. கலைநயமிக்க வேலைப்பாடுகள் அனைத்தும் கைகளால்தான் செய்கின்றனர். தஞ்சாவூர் வீணைகள் பலா மரத்தில் செய்யப்படுவதால் தனிச்சிறப்புடன் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது.
பண்ருட்டியில் உள்ள பலா மரம்தான் வீணை செய்வதற்குச் சரியான மரம். பண்ருட்டி பலா மரத்தில் பால் சத்து அதிகமாக இருக்கும். இதனால், மரம் கெட்டியாக இருப்பதுண்டு. எத்தனை ஆண்டு காலமானாலும் மரம் கெட்டுப் போகாது. தஞ்சை வீணை பிற மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
முன்பெல்லாம் தஞ்சாவூரில் மாதந்தோறும் 50 முதல் 60 வீணைகள் மட்டுமே விற்பனையாகி வந்த நிலையில், இப்போது மாதத்துக்கு ஏறத்தாழ 100 வீணைகள் விற்பனையாகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.