கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது - தஞ்சை கலெக்டர் தகவல்
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு BFSI (Banking Financial Service Insurance) யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
தஞ்சாவூர்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தனியார் வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏதவாக கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது பெருகி வரும் வேலைவாய்ப்பு சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தாட்கோ நிறுவனமானது புகழ் பெற்ற தனியார் வங்கியுடன் இணைந்து கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியினை வழங்க உள்ளது.
இப்பயிற்சியில் சேர 22 முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடர்/ பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Such as BA, B.Com, and B.Sc-Maths) முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 20 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதிகள் மேற்கொள்ளப்படும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சி தேர்வுக்கும் அனுமதிக்கப்படும்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு BFSI (Banking Financial Service Insurance) யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக (Accounts Executive) பணியில் சேர பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.