குத்தகை பாக்கி தராமல் டிமிக்கி - ஸ்டார் ஹோட்டலுக்கு சீல் வைத்து ஆட்சியர் அதிரடி
’’இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு 40 கோடி முதல் 50 கோடி வரை இருக்கும் நிலையில் 12 கோடி வரை நிலுவைத் தொகையை அரசுக்கு தராமல் இழுத்தடித்ததால் நடவடிக்கை’’
தஞ்சாவூரில் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு 1995 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காகப் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது தஞ்சாவூரில் போதுமான அளவுக்கு நட்சத்திர தங்கும் விடுதிகள் இல்லை. இதனால், தனியார் நட்சத்திர தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு அரசுத் தரப்பில் சலுகைகள் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் 1994, ஜூன் 7 ஆம் தேதி தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே அரசு நிலத்தில் 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பி. செல்வராஜூக்கு நட்சத்திர தங்கும் விடுதியான டெம்பிள் டவர் கட்ட ஒரு ஏக்கர் 6,169 சதுர அடி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குத்தகை உரிமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இந்த நட்சத்திர தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இதனிடையே அரசு அனுமதியின்றி ஒப்பந்தத்தை மீறி எம். வெங்கடாச்சலம் மற்றும் எம். குமாருக்கு, செல்வராஜ் உள் வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வருவது அலுவலர்களின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், முறையாக குத்தகை செலுத்தப்படாததால் 12 கோடி நிலுவை உள்ளது. இதுகுறித்து தங்கும் விடுதி நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டும் நிலுவைத்தொகை செலுத்தப்படவில்லை. இதனால், 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த இடத்தை ஒப்படைக்குமாறு வருவாய் துறை சார்பில் நீதிமன்றம் மூலம் 2019 ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் நட்சத்திர தங்கும் விடுதி நிர்வாகம் எந்த பதிலும் அளிக்காததால், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் ஏராளமான காவல் துறையினரின் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறுகையில்,30 ஆண்டு குத்தகை என்ற அடிப்படையில் செல்வராஜ் என்பவருக்கு நகரின் முக்கிய பகுதியில் 1 ஏக்கர் 6160 சதுர அடி அளவில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் கொடுக்கப்பட்டது. அவர் அதில் மூன்று நட்சத்திர ஓட்டல் கட்டியுள்ளார். இங்கு அறைகள், ரெஸ்டாரன்ட், மதுபான பார் உள்ளிட்டவை உள்ளன. இந்த நிலையில் செல்வராஜ் குறிப்பிட்ட தேதியில் குத்தகை பணம் செலுத்தாமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதுவரை அவர் ரூ.12 கோடிக்கு குத்தகை பணம் பாக்கி வைத்துள்ளார். மேலும், குத்தகை விதிமுறைகளை மீறி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் வெங்கடாச்சலம், குமார் ஆகியோருக்கு இந்நிறுவனத்தை உள் வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.40 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை இருக்கும். இவ்வளவு விலை உயர்ந்த இடத்தில் விதிமுறைகளை மீறி வேறு நபர்களுக்கு உள் வாடகை கொடுத்தும், குத்தகை பணமும் முறையாக செலுத்தாமலும் செல்வராஜ் இருந்து வந்தார். இதுகுறித்து பலமுறை கேட்கப்பட்டும், நோட்டீஸ் அனுப்பியும் சரியான பதில் இல்லை. எனவே டெம்பிள் டவர் ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் முன்பதிவு செய்த அறைக்கான பணம் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குத்தகை உரிமையாளர் நிலுவைப்பணமான ரூ.12 கோடி செலுத்தினால் அரசு உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.