வோவ்! ரூ.300 செலவுல இப்படி ஒரு அசத்தல் கண்டுபிடிப்பா? - கெத்து காட்டும் தஞ்சாவூர் ஏழாம் வகுப்பு மாணவன்!
அறிவியல் ஆசிரியை வழிகாட்டுதலில் தன் கண்டுபிடிப்பை செய்து முடித்து வெற்றிக்கனியை பறித்துள்ளார் தஞ்சை மாணவர்.
தஞ்சாவூர்: விடா முயற்சி செய்பவர்களிடம் ஒரு நாள் தோல்வியும் தோற்றுப்போகும். கடைசி வரியில் கூட நமக்கான அற்புதமான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம் என்பதை என்றும் மறக்கக்கூடாது. கடைசி வரை போராடுபவனே வெற்றியாளன் ஆகிறான். கல்லை செதுக்க செதுக்கத்தான் சிற்பம் தோன்றும். அதேபோல் முயற்சி செய்ய செய்யதான் வெற்றியின் பாதை தெரியும். அதுபோல் அறிவியல் ஆசிரியை வழிகாட்டுதலில் தன் கண்டுபிடிப்பை செய்து முடித்து வெற்றிக்கனியை பறித்துள்ளார் தஞ்சை மாணவர்.
எரிவாயு கசிவை கண்டுபிடித்து அலாரம் அடிக்கும்
எரிவாயு பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் எரிவாயு இணைப்புதான் முக்கிய இடம் பிடிக்கிறது. அதிகமான எரிவாயு பயன்பாட்டில் கவனக்குறைவு உட்பட பல காரணங்களால் விபத்துகளும், உயிர் சேதம், பொருட்சேதமும் ஏற்படுகிறது. எனவே அதனை தவிர்ப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் என்ன செய்யலாம். குறைந்த செலவில் எரிவாயு லீக் ஆவதை உடனடியாக அலாரம் அடித்து தெரிவிக்கும் கருவியை கண்டுபிடித்து மாநில அளவில் அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பிடித்துள்ளார்
தஞ்சை திருமகள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் து.பிரியதர்ஷன். மாணவரின் தந்தை துரைராஜ். எலக்ட்ரிஷியன். தாய் மேகலா. பள்ளி தலைமை ஆசிரியை கே.தேன்மொழி ஒத்துழைப்புடன் அறிவியல் ஆசிரியை ஏ.கமலா வழிகாட்டுதலில் மாணவர் பிரியதர்ஷனின் இந்த கண்டுபிடிப்பு பல பாராட்டுக்களை குவித்துள்ளது.
தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்வு
அடுத்த வாரம் தேசிய அளவில் போபாலில் நடக்கும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு இந்த கண்டுபிடிப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது ஹைலைட். இந்த சாதனம் நமது சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எரிவாயு கசிவை நாம் உணர்வது என்பது பலருக்கும் இயலாத நிலைதான். காலையில் எழுந்தவுடன் வேலை பரபரப்பில் இதை உணர்வதில்லை. வெளியில் சென்று இருந்தால், வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டால், அதை உணர்ந்து, யாராவது உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கான சாதனத்தை 300 ரூபாயில் மிக குறைந்த செலவில் கண்டுபிடித்துள்ளார் மாணவர் பிரியதர்ஷன்.
தீவிபத்தில் இருந்து பாதுகாக்கிறது
இந்த சாதனம் எரிவாயு கசிவை உடனடியாக உணர்ந்து அபாய ஒலி ஏற்படுத்தி உங்களை அலார்ட் செய்கிறது. தீ விபத்திலிருந்து உங்களை பாதுகாக்கிறது. சிறிய எரியக்கூடிய வாயு கசிவைக் கூட கண்டறிந்து விடும் என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம். எரிவாயு உருளையின் அருகில் ஒரு ஸ்விட்ச் போன்ற அமைப்பில் இரண்டு பேட்டரிகள், ஒரு சென்சார், ஒரு சிறிய ஸ்விட்ச், ஒரு பஸ்சர், ஒரு எல்இடி லைட் ஆகியவை பொருத்தப்படுகிறது. இதில் சென்சார் எம்.கியூ-2 கேஸ் சென்சார் வைக்கப்படுகிறது. காரணம் இந்த எம்.கியூ-2 கேஸ் சென்சாரில் எரிவாயு உருளையிலிருந்து லீக் ஆகும் எரிவாயுவை உணர டின்டயாக்சைடு இருக்கும்.
இது உடனடியாக சென்சார் இணைக்கப்பட்டுள்ள சுவிட்ஸ் போர்ட்டில் உள்ள பஸ்சரை ஒலிக்க செய்கிறது. மேலும் எல்இடி லைட்டும் உடனடியாக எரிகிறது. இதனால் ஆபத்து அருகில் வராதே என்ற எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த அமைப்பை மிகவும் குறைந்த செலவில் அதாவது ரூ.300க்கும் அமைத்து விடலாம். உயிர் காக்கும் சாதனம் மட்டுமின்றி பொருள் இழப்பு, வீடுகள் சேதமடைதல் போன்றவற்றையும் எரிவாயு கசிவிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். எரிவாயு உருளையில் பாடி லீக், பங்க் லீக், பாட்டம் லீக், பைப் லீக் போன்றவற்றை உணர்ந்து பஸ்சரில் ஒலி எழுப்புகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பை எரிவாயு உருளை அருகில் எளிதில் பொருத்தி விடலாம்.
மாவட்டம், மாநில அளவில் தேர்வான கண்டுபிடிப்பு
இந்த அறிவியல் கண்டுபிடிப்பை வழிகாட்டி ஆசிரியை ஏ.கமலா உதவியுடன் கண்டுபிடித்த மாணவர் பிரியதர்ஷன் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகள் போட்டியில் நேரடி செயல் விளக்கம் செய்து காட்டி அனைவரையும் அசத்தி கிரேடு 1 ஆக தேர்வானார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றி மேலும் உற்சாகத்தை ஏற்படுத்த புதுக்கோட்டை மாவட்டம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடந்த மண்டல அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். திருச்சி புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தலில் மாணவர் பிரியதர்ஷனின் கண்டுபிடிப்பும் தேர்வானது. இதையடுத்து அடுத்த வாரம் தேசிய அளவில் போபாலில் நடக்கும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வாகி உள்ளது இந்த கண்டுபிடிப்பு.
ஏழை மக்களுக்கும் சென்றடைய வேண்டும்
மாணவர் பிரியதர்ஷன் தனது கண்டுபிடிப்பு பற்றி கூறுகையில், எரிவாயு கசிவை தடுக்கும் இந்த கருவி ஏழை மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளில் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி ஒத்துழைப்பு மற்றும் அறிவியல் ஆசிரியை கமலா வழிகாட்டுதலில் இந்த கருவியை கண்டுபிடித்தேன். இந்த ஆய்வின் முடிவில் மக்கள் எதிர்பார்ப்பது விலை குறைவான சிறப்பான கருவியைதான். மக்களின் எதிர்பார்ப்பை மையப்படுத்தி இந்த கருவியை கண்டுபிடித்துள்ளேன். மேலும் இதை இன்னும் மேம்படுத்தியதாக மாற்றி இன்னும் பொருட்செலவை குறைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார்.
பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி கூறுகையில், மாணவர் பிரியதர்ஷனின் இந்த கண்டுபிடிப்பு சிறப்பான ஒன்று. இந்த கண்டுபிடிப்பு தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று பாராட்டுகிறேன் என்றார்.
அறிவியல் ஆசிரியை கமலா கூறுகையில், மாணவர் பிரியதர்சன் ஏழை மக்களும் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலும் உயிர் இழப்புகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கண்டுபிடித்துள்ளார். எளிய முறையில் ரூ.300க்குள் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளார். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க இந்த கருவியை இன்னும் மேம்பாடான ஒன்றாக மாற்றுவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார் என்றார்.