சுவாமிமலையில், வரும்முன் காப்போம்-டாக்டர் கலைஞர் சிறப்பு மருத்துவ முகாம்
முகாமில் சத்தான உணவுகளை சாப்பிடும் முறை குறித்தும் கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் டாக்டர் கலைஞர் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஏழை எளிய மக்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டு, அதனை சரி செய்வதற்காக மட்டுமே மருத்துவர்களையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நாடிச் செல்கின்றனர். நோய்கள் வருமுன் அதனை தடுக்கும் அணுகுமுறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கிட, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் பயன்படும்.
இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவார்கள். பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல் போன்றவை அடங்கும்.
மேலும் அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய்கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சைஅளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு 'வருமுன் காப்போம் திட்டம்' செயல்படும்.
அந்த வகையில் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் டாக்டர் கலைஞர் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா, பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், துணைத்தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முகாமில் பொதுமக்களின் வருகை பதிவு செய்யப்பட்டு பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை, கண் மருத்துவ பரிசோதனை, பல் மருத்துவ பரிசோதனை, எலும்பு முறிவு மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, சித்த மருத்துவம், காசநோய், தொழுநோய் பரிசோதனைகளும், ஆய்வக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் சத்தான உணவுகளை சாப்பிடும் முறை குறித்தும் கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சத்துமாவு பாயசம், எள் உருண்டை, கொழுக்கட்டை, சத்துமாவு உருண்டை, கபசுர குடிநீா் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். சித்த மருத்துவம், காசநோய் தடுப்பு, எய்ட்ஸ் கட்டுப்பாடு, யானைக்கால் நோய் தடுப்பு, டெங்கு தடுப்பு என பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனர். மேலும் இந்த மருத்துவ முகாமில் 25 கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு கிலோ பேரிச்சம்பழம், சத்துமாவு, தலா அரை கிலோ ஆவின் நெய், புரதச்சத்து பிஸ்கட், 200மி இரும்பு சத்து டானிக் உள்ளிட்டவை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.