ஊராட்சிக்கு சொந்தமான தேக்கு மரங்கள் கடத்தல் - ஒருவரை ஒருவர் கைக்காட்டும் திமுகவினர்
திமுகவினர் இரு பிரிவாக உள்ளதால், ஒருவரை ஒருவர் பதவியிலிருந்து இறக்குவதற்கான உள்வேலைகளில் ஈடுபடுகிறார்கள். மேலும், அதிமுகவினரையும், துாண்டி விட்டு, புகார் அளிக்க சொல்லியுள்ளார்கள்.
கும்பகோணத்தை அடுத்த பழவாத்தான்கட்டளை ஊராட்சியில் உள்ள பிரசாந்தி நகர் மனைப்பிரிவில் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சாய்ராம் பூங்காவில் 40 தேக்கு மரங்கள் பல மாதங்களுக்கு முன்பு நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்திருந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்காவில் இருந்த 15 தேக்கு மரங்களை மர்ம நபர்கள் அடியோடு வெட்டி கடத்தி உள்ளனர். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்குமரங்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பழவாத்தான்கட்டளை ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் காயத்ரி அசோக்குமார், பூங்காவிற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தியுள்ளதை உறுதி செய்த பின்னர், வனச்சரக அலுவலகத்தில் ஆய்வாளர் குணசேகரனிடம் ஊராட்சிக்கு சொந்தமான தேக்கு மரங்களை வெட்டி திருடியவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுத்து மேற்படி திருட்டுப்போன தேக்கு மரங்களை மீட்டு பொதுமக்கள் முன்னிலையில் ஏலத்தில் விட வேண்டும் என்றும், தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டதை வனசரக அலுவலர்களுக்கும், மேலதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காத ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 19 வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் செந்தாமரைச் செல்வி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் முன்னிலையில் புகார் மனு அளித்தனர்.
இதே போல் அதிமுக ஒன்றிய செயலாளர் அறிவழகன், கும்பகோணம் கோட்டாசியரிடம், பழவத்தான்கட்டளை ஊராட்சியில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரங்களை அடியோடு வெட்டி திருடி சென்றுள்ளனர். அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி திருடியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதோடு, மரங்களை பறிமுதல் செய்து, திருடுவதற்கு உறுதுணயாக இருந்தவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி நிர்வாகி கூறுகையில், பழத்தான்கட்டளை ஊராட்சியிலுள்ள பூங்கா, சுமார் 2000ஆம் ஆண்டுக்கு முன்பு ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு சாதனைக்காக மரங்களை நடவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட போது, 40 க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் நடப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் போது, மின்தாரத்துறை அமைச்சர், மின்கம்பிகளுக்கு இடையூராக இருக்கும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதால், மின்கம்பிகள் செல்லும் பகுதியில் இடையூராக இருந்த மரங்களை மின்சாரத்தை துறையினர் வெட்டி போட்டுள்ளனர். ஆனால் அந்த மரங்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பழவத்தான்கட்டளை ஊராட்சியிலுள்ள திமுகவினர் இரண்டு பிரிவாக உள்ளதால், ஒருவரை ஒருவர் பதவியிலிருந்து இறக்குவதற்கான உள்வேலைகளில் ஈடுபடுகிறார்கள். மேலும், இது தொடர்பாக அதிமுகவினரையும், துாண்டி விட்டு, புகார் அளிக்க சொல்லியுள்ளார்கள்.மரங்களை திருட்டுப்போன பிரச்சனை உருவாவதற்கு, பழவத்தான்கட்டளை ஊராட்சி மற்றும் ஒன்றிய செயலாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையே காரணம். தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.