தஞ்சை ரயில் நிலைய நுழைவுவாயிலேயே டிக்கெட் கவுன்டர் அமைக்க வலியுறுத்தி தீர்மானம்
இரண்டாவது நுழைவு வாயிலில் தற்போது உள்ள டிக்கெட் கவுன்ட்டரில் போதுமான அளவுக்கு கூரை வசதிகள் செய்து தரப்படவில்லை.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் 5 நடை மேடைகளை கடந்து சென்று பயணிகள் டிக்கெட் எடுக்கும் நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் ரயிலை தவறவிட்டு விடுகின்றனர். எனவே பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு நுழைவாயிலிலேயே டிக்கெட் கவுண்டர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்
காவிரி டெல்டா பகுதி ரயில் பயணிகள் சங்க அவசர கூட்டம் தலைவர் திருமேனி தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் அய்யனாபுரம் நடராஜன், வக்கீல் ஜீவக்குமார், சந்திரசேகரன், உமர் முக்தர், கண்ணன் செல்ல கணேசன், முகமது பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தஞ்சை ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் அதன் மதிப்பீட்டு தொகை, வேலை தொடங்கிய நாள், உத்தேசமாக பணிகள் முடிவடையும் நாள் ஆகியவற்றை பொது மக்கள் அறியும் வண்ணம் வெளிப்படையாக அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.
ரயில் நிலைய முன் பகுதி மூடல்
அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் தஞ்சை ரயில் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு திட்ட பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக இந்த பணிகள் நடந்து வருவதால் பணிகள் நடைபெறுவதற்கு பயணிகளின் வருகை இடையூறாக இருக்கும் என்பதால் தஞ்சை ரயில் நிலையத்தின் முன்பகுதி மூடப்பட்டு விட்டது. ரயில் நிலையத்தின் முன்பகுதியில் இருந்த டிக்கெட் கவுண்ட்டர்களும் மூடப்பட்டு விட்டன. ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவுப் பகுதியில் ஏற்கனவே உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களுடன் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
டிக்கெட் எடுக்க பயணிகள் பெரும் அவதி
இங்கு உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் போதுமான வசதிகள் செய்து தரப்படாததால் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். ரயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள பிரதான வாசல் வழியாக ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக 5 நடைமேடைகளை கடந்து டிக்கெட் எடுக்க செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பிரதான வாசல் வழியாக வரும் ரயில் பயணிகள் 5 நடைமேடைகளை கடந்து டிக்கெட் எடுத்து விட்டு அவசர, அவசரமாக திரும்புவதற்குள் அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் சென்று விடுவதால் தாங்கள் செல்ல வேண்டிய ரெயிலை பிடிக்கமுடியாமல் தவற விடும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.
போதுமான வசதிகள் இல்லை
மேலும் இரண்டாவது நுழைவு வாயிலில் தற்போது உள்ள டிக்கெட் கவுன்ட்டரில் போதுமான அளவுக்கு கூரை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் தற்போது நிலவும் வெப்ப அலையின் கதிர் வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பயணிகள் வெயிலில் நின்று மயக்கம் அடைந்து விழும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே தற்போது உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் பயணிகள் சிரமம் இன்றி டிக்கெட் எடுக்க ஏதுவாக கூடுதல் மேற்கூரை வசதி செய்து தர வேண்டும். மேலும் தஞ்சை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதியில் உடனடியாக ஒரு டிக்கெட் கவுண்ட்டர் அமைத்து தர வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதி ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.