பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதலி தர்ணா
’’திருமணம் செய்ய கேட்டபோது நீ ஏழை; உன்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்ததாக வேதனை’’
![பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதலி தர்ணா Thanjavur: Protest against a young woman in front of the Collector's Office - Demand for action against boyfriend who sexually abused and cheated on her பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதலி தர்ணா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/04/e7832c5891eb95e816a90f87b9a728c6_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காதலித்து ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கும் காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.
விசாரணையில், அப்பெண் ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (20) என்று தெரிவித்தார், பின்னர் கூறுகையில், தான் 11 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது எனது ஊரைச் சேர்ந்த இளைஞருடன் பழகி வந்தேன். நாளடைவில் அது காதலாக மாறியது. அந்த பழக்கத்தின் அடிப்படையில் எங்கள் வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்து செல்வார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது வீட்டில் தனியாக இருந்தபோது திருமணம் செய்து கொள்ளவதாக ஆசை வார்த்தை கூறி நான் மறுத்த போதும் என்னை வலுக்கட்டாயப்படுத்தி பலவந்தமாக என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதை வெளியில் சொன்னால் உன்னை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மிரட்டினார். நான் அதற்கு பயந்து யாரிடமும் சொல்லவில்லை. பின்னர் நான் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டேன். அங்கும் அவர் வந்து என்னுடன் பலமுறை தனிமையில் இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சென்றார். இதையடுத்து என்னிடம் பேசுவதையும் தவிர்த்தார். இது குறித்து கேட்ட போது நீ ஏழை. உன்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்தார்.
நான் உயிருக்கு பயந்து வந்துவிட்டேன். இதுகுறித்து கிராம முக்கியஸ்தர்களிடம் கூறியதின் பேரில் கடந்த 25-ம் தேதி பஞ்சாயத்து பேசி இரண்டு பேரையும் அழைத்து விசாரித்ததில் என்னை திருமணம் செய்து அழைத்து செல்வதாக பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் கூறினார். ஆனால் அதற்கு மறுநாள் நான் வீட்டில் இருந்தபோது அந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோர், பஞ்சாயத்தார்கள், போலீசுக்கு சென்றால் உன்னையும் உனது குடும்பத்தையும் காலி செய்து விடுவோம் என்று மிரட்டினர். எனவே, காதலித்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்ய மறுக்கும் இளைஞர் மற்றும் அவரது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து ஆட்சியர்அலுவலகத்தில் மனு கொடுங்கள் என போலீசார் கூறியதன் பேரில் லட்சுமி மனு கொடுத்து விட்டு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் ஆட்சியர்அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)