அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை, அதிகாரிகளின் அலட்சியம் - பூதலூர் அருகே மக்கள் திடீர் சாலை மறியல்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே அடிக்கடி ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே அடிக்கடி ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்களாக, அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. ஒருநாளைக்கு குறைந்தது 6 அல்லது 7 முறை மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்தது. இதனால் வியாபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் காலையில் 7 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் பலமுறை மின்சாரம் நிறுத்தப்பட்டதால் குடும்பத் தலைவிகள் வெகுவாக அவதிக்குள்ளாகினர். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் காலைவேளையில் சமையல் பணிகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டதால் அவதியடைந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, மிகவும் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வணிகர் சங்கத்தினர், பூதலுார் மக்கள் உரிமை கூட்டமைப்பு, கார்,ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர் சங்கத்தினர் இணைந்து பூதலுார் – செங்கிப்பட்டி சாலையில் வீரமசன்பேட்டை மின்வாரிய துணை மின் நிலைய அலுவலகம் முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பூதலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். பிறகு, வீரமரசன்பேட்டை மின்சார வாரிய உதவி பொறியாளர் பாஸ்கரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இனி வரும் காலங்களில் இதுபோன்ற மின்வெட்டு இருக்காது என உறுதி அளித்தார். இந்த உறுதிமொழியின் பெயரில் சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ.ராஜ்குமார் கூறுகையில், ஒரு நாளைக்கு குறைந்தது 5 முறைக்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது. காலை வேளையில் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகளை பள்ளிக்கு சரியான நேரத்தில் அனுப்ப முடியாமல் குடும்பத் தலைவிகள் தவிக்கின்றனர். ஒருமுறை மின்தடை செய்யப்பட்டால் குறைந்தது அரை மணி நேரத்திற்கு பின்னர்தான் வருகிறது. இதேபோல் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
டிபன் கடைகள், மளிகை கடைகள், ஜவுளி கடைகள், வங்கிகள் என்று ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் பூதலூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இப்படி அறிவிக்கப்படாத மின்தடையால் அனைத்து தரப்பினரும் வெகுவாக அவதிக்கு உள்ளாகின்றனர். இதற்கு காரணம் மிகவும் பழமையான மின்சாதனப் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதுதான். எனவே இதுபோன்ற மிகவும் பழமையாக மின்சாதனப் பொருட்களை உடன் மாற்றி புதிதாக பொருத்த வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில் இதுபோன்ற பழமையான மின்சாதன பொருட்களை மாற்றி புதிய பொருட்களை பொருத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மின்தடை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் உரிய முறையில் பதில் அளிப்பதில்லை. இதுபோன்ற நிலை இனியும் தொடர்ந்தால் மக்களை அதிகளவில் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.