தஞ்சாவூர்: 2020ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பயிர்க்காப்பீடு தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
’’குறைத்தீர் கூட்டத்தில் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்வி கடன் உள்ளிட்ட பொதுமக்கள் 553 மனுக்களை வழங்கினர்’’
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீடு கடந்தாண்டு சம்பா சாகுபடியின் போது பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்வி கடன் உள்ளிட்ட 553 மனுக்களை வழங்கினர்.
இந்த மனுக்களை தொடர்புடைய அதிகாரிகளிடம் வழங்கி விரைவில் தீர்வு காண கலெக்டர் வலியுறுத்தினார்.மேலும், கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் காசாவளநாடு புதூர் விவசாயிகள், எங்களது பகுதியில் கடந்த சம்பா பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது. சம்பா பருவத்துக்கு பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்தியிருந்தோம். ஆனால் அதற்கான இழப்பீடு தொகை எங்களது கிராமத்தில் முழுமையாக வழங்காமல், ஒருசில விவசாயிகளுக்கு மட்டும் வழங்கி பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. மேலும், காசாவளநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ஆன்லைன் மூலம் தனியார் இன்ஸ்சுரன்ஸ் நிறுவனத்தில் பணத்தை கட்டினோம். ஆனால் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பருவம் மாறி பதிவேற்றம் செய்ததால், தொகை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே காப்பீடு செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்" என மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
அதே போல் தஞ்சாவூர் அருகே ஆலக்குடி காமாட்சிபுரம் புதுமனைத் தெருவைச் சேர்ந்தவர்கள், எங்களது பகுதியில் மூன்று தலைமுறையாக குடிநீர், கழிவறை, தெரு விளக்கு உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். பலமுறை மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ, ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும், பல்வேறு போராட்டங்கள் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்களால் பகுதியாகவும், மக்களுக்கு அன்றாடம் தேவையான குடிநீர், சுகாதார வசதிகள், தெரு விளக்கு, கழிப்பறைகள், சாலை வசதிகள் இல்லாமல் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வாழ்ந்து வருகின்றோம். மேற்கண்ட வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்ததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் சமாதானம் செய்து, பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்க போலீஸார் ஏற்பாடுகளை செய்தனர். கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.