தஞ்சாவூர்: ஆபத்தான நிலையில் உள்ள பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்புகள்
’’மிகவும் ஆபத்தான, எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டி தர கோரிக்கை’’
கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பட்டீஸ்வரம், சோழன்மாளிகை, ஆரியப்படையூர், தேனாம்படுகை, நாதன்கோயில், பம்பப்படையூர், உடையாளூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் சுமார் 50 கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், வளாகத்தில் உள்ளே உள்ள குடியிருப்புகளில் தங்கி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டி கொடுத்துள்ளனர். ஆனால் நாளடைவில் போதுமான பராமரிப்பு இல்லாததால், அனைத்து குடியிருப்புகளும் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது பாழடைந்துள்ள குடியிருப்பு பகுதியில் வாட்ச்மேன், உதவியாளர்கள் என ஒரு சில வீடுகளில் குடியிருக்கின்றனர். இங்குள்ள அனைத்து கட்டிடங்களும் விரிசல் விட்டும், ஓடுகள் சரிந்து, மழை பெய்தால், வீட்டிற்குள் நனையும் அளவிற்கு அனைத்து வீடுகளும் உள்ளது. மேலும் போதுமான மின்சார வசதிகள் இல்லாததால், குறைந்த மின் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த குடியிருப்புகள் வளாகம் முழுவதும் புல்செடிகள், காட்டுசெடிகள், காடு போல் மண்டியுள்ளதால், எந்நேரமும் பாம்புகள், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அங்கு குடியிருக்கும் ஊழியர்கள் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மழை காலம் தொடங்கி உள்ள நிலையில், தற்போது மழை அதிகமாக பெய்யும் என தெரிவித்துள்ளனர். கன மழை பெய்தால், அங்குள்ள வீடுகளின் ஓட்டினாலான மேற்கூரை கீழே விழும். பக்கவாட்டு சுவர்ககளில் மழை நீர் கசிந்து அனைத்து வீடுகள் இடிந்து தரை மட்டமாகும். குடியிருப்பு கட்டிடத்தின் ஒரங்களில் மரம், செடி, கொடி முளைத்துள்ள கட்டிடத்தின் இஸ்திர தன்மை கேள்வி குறியாகியுள்ளது. தமிழக அரசு அனைத்து பகுதிகளையும் சுகாதாரமாக வைத்துகொள்ள வேண்டும், என்று உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள ஊழியர்களுக்கான குடியிருப்புகள் மிகவும் அவல நிலையில் இருப்பது வேதனையான விஷயமாகும்.
இது குறித்து கடந்த 5 வருடங்களுக்கு மேலாக, கோரிக்கை விடுத்தும், எந்தவிதமான பலனும் இல்லாமல் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கட்டிடத்தை சுகாதாரத்துறை உயரதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்கள் அனைவரையும், சுகாதாரமாகவும், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சுகாதாரத்துறையினரின் குடியிருப்பு ஆபத்தான நிலையில் இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது. எனவே மாவட்ட நிர்வாகம், மிகவும் ஆபத்தான, எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும், மாவட்ட நிர்வாகம் அலட்சியப்படுத்தினால், அங்குள்ள குடியிருப்பவர்களின் நிலை கேள்வி குறியாகி விடும்.