கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
40 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு சிறிய ரக பயணிகள் விமானமான வாயு தூத் என்ற விமான சேவையை மத்திய அரசு தொடங்கியது.
தஞ்சாவூர்: மற்ற நகரங்களுக்கு போட்டியாக வர்த்தகத்திலும், சுற்றுலாவிலும் கிடுகிடுவென்று முன்னேற்றம் கண்டும் வரும் தஞ்சாவூரில் பயணிகள் விமான நிலையம் அமைவது கனவாகி விடுமா? அல்லது விரைவில் நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. ஏன் தாமதம்?
ஆங்கிலேயர்கள் அமைத்த விமானப்படை நிலையம்
இரண்டாம் உலகப் போர் நடந்த போது தஞ்சாவூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இனாத்துக்கான்பட்டியில் ஆங்கிலேயர்களால் விமானப் படை நிலையம் அமைக்கப்பட்டது. போருக்கு பின்னர் இந்த விமானப்படை நிலையம் கைவிடப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தை தென் தீபகற்பத்தின் முக்கியமான விமானப் படை தளமாக இந்திய விமானப் படை மேம்படுத்தியுள்ளது. இதற்கிடையே 40 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு சிறிய ரக பயணிகள் விமானமான வாயு தூத் என்ற விமான சேவையை மத்திய அரசு தொடங்கியது.
தஞ்சாவூரில் விமான சேவை தேவை
பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் 2 ஆண்டுகளில் இச்சேவை நிறுத்தப்பட்டது. இருப்பினும் தஞ்சாவூரில் விமான சேவையைத் தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தேர்தலுக்கு தேர்தல் அரசியல்வாதிகள் வாக்குறுதி அளித்தாலும் தஞ்சாவூர் விமான நிலையம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
விமான நிலையம் அமைக்க திட்டம்
இதனிடையே, இந்திய விமானப்படை நிலையத்துக்கு உள்பட்ட ஒரு பகுதியில் தஞ்சாவூர் விமான நிலையத்தை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் ஏற்கெனவே இரு ஓடுதளப் பாதைகள் உள்ளன. ஆனால், விமான நிலைய முனையக் கட்டிடமோ, பயணிகள் விமானத்தில் ஏறி, இறங்குவதற்கான கட்டமைப்போ இல்லை என்பதுதான் பெரிய பின்னடைவு. இங்கு ஏறத்தாழ 56.16 ஏக்கர் நிலம் இந்திய விமானப் படையிடமும், 26.5 ஏக்கர் இந்திய விமான நிலைய ஆணையத்திடமும் உள்ளது. இதை பயணிகள் விமான நிலையமாக மாற்றுவதற்காக நிலத்தை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு இந்திய விமான நிலைய ஆணையமும், இந்திய விமானப் படையும் சில ஆண்டுகளுக்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
கனவாகவே இருக்கும் விமான நிலையம்
இதையடுத்து ஒரு பகுதி நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் விமானப் படை ஒப்படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் பயணிகள் விமானப் போக்குவரத்தைத் தொடங்க முனையக் கட்டடம் உள்ளிட்ட வசதிகளை ரூ. 200 கோடியில் ஏற்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இன்னும் எந்தவித பணிகளும் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் தஞ்சாவூரில் விமான நிலையம் என்ன கனவு... கனவாகவே உள்ளது. அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், நடைமுறையில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்ற அதிருப்தி மக்களிடையே நிலவுகிறது.
மிகப்பெரிய சுற்றுலா தலமாக உள்ளது
தஞ்சாவூரில் பெரிய கோயில், அரண்மனை, திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம், கும்பகோணம் கோயில்கள், நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குரு பகவான் கோயில், நாகை மாவட்டத்தில் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், நாகூர் தர்கா, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் என்று தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டம் மிகப்பெரிய சுற்றுலாத்தலம், கோயில்கள் நிறைந்த பகுதியாக விளங்குகிறது. இங்கு வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. முக்கியமாக வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகின்றனர் என்பதுதான் மிக முக்கியமான விஷயம்.
தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் காணும் தஞ்சை
தஞ்சாவூரில் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐ.டி. பூங்கா உள்பட பல்வேறு வகையான தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த மாநகரமாக தஞ்சாவூர் வளர்ச்சி அடைந்து வருகிறது. பிற நகரங்களுக்கு போட்டியாக தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. தற்போது தஞ்சாவூருக்கு விமான நிலையம் அவசியம் தேவைப்படுகிறது. இதன் மூலம் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பயன்பெறும். தஞ்சாவூரிலிருந்து சென்னை, பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கப்பட்டால், அதன் மூலம் வெளிநாடுகளுக்கான இணைப்பு விமான சேவையைப் பெற முடியும். எனவே கனவு கனவாகமால் நனவாக வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.
விமானநிலையம் நிச்சயம் அமையும்
விமான நிலைய திட்டம் குறித்து தஞ்சாவூர் எம்.பி., ச. முரசொலி கூறுகையில், விமான முனையத்துக்கான சாலை தற்போது வளைவு, நெளிவாக உள்ளது. இந்தப் பாதை நேராகக் கிடைத்தால் விமான நிலையம் அமைவது உறுதியாகிவிடும். இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடமும், விமான போக்குவரத்து துறை அமைச்சரிடமும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். அவர்களும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். இதனிடையே, மற்றொரு பாதை இருப்பதாக மாவட்ட கலெக்டரும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் விமான நிலையம் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.