கல்லணைக்கால்வாயில் குளித்த வாலிபர்... தண்ணீரில் மூழ்கி மாயம்
தனது 2 நண்பர்களுடன் நேற்று மாலை ரெட்டிப்பாளையம் பகுதியில் கல்லணைக்கால்வாய் ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது முகமது அசீம் சற்று ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் பகுதியில் கல்லணைக்கால்வாயில் குளிக்க சென்று தண்ணீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி, வனதுர்கா நகர் பகுதியை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரின் மகன் முகமது அசீம் (28). இவர் தனது 2 நண்பர்களுடன் நேற்று மாலை ரெட்டிப்பாளையம் பகுதியில் கல்லணைக்கால்வாய் ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது முகமது அசீம் சற்று ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார்.
ஆற்றில் தண்ணீரின் வேகத்தில் முகமது அசீம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதை பார்த்து அவரது 2 நண்பர்கள் முகமது அசீமை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடன் மருத்துவக்கல்லூரி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் இறங்கி முகமது அசீமை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இரவு நேரம் ஆனதால் வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை தீயணைப்பு படை வீரர்கள் மீண்டும் கல்லணைக்கால்வாய் ஆற்றில் பல கிலோ மீட்டர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் நேற்று மாலை வரை முகமது அசீம் கிடைக்கவில்லை. இதனால் அவர் என்ன ஆனார் என்பது குறித்த தெரியாத நிலையே நீடித்து வருகிறது.
ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகம் இருப்பதால் யாரும் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் இதை அலட்சியப்படுத்தி இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக அமைந்து விடுகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுபோன்ற கடந்த ஆடி பெருக்கு விழாவிற்கு முதல்நாள் சிறுவனும், அவரது மாமாவும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். கடந்த மாதத்தில் ஆற்றில் குளித்த சிறுவன் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.





















