பாதாள சாக்கடை, சாலைகளை சீரமைக்க வேண்டும்... தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
பாதாள சாக்கடை, சாலைகள் சீரமைப்புகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று மாநாகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூா்: பாதாள சாக்கடை, சாலைகள் சீரமைப்புகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று மாநாகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். தஞ்சை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். ஆணையர் கண்ணன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தஞ்சையில் நியோ டைடல் பார்க் அமைத்த முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு
கவுன்சிலர் கண்ணுக்கினியாள்: பாதாள சாக்கடை சீரமைப்பு பணியின் போது மண் சரிந்து விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு உயிர் பலி போயிருக்காது. எனவே அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பூக்கார தெற்கு தெரு, முஸ்லிம் தெரு, மாதா கோவில் தெரு போன்ற பகுதிகளில் இன்னும் பாதாள சாக்கடை பிரச்சனை தீரவில்லை. அதனை உடனே தீர்க்க வேண்டும். பூக்கார வடக்கு தெருவில் சாலை அமைத்து தர வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் நடந்து செல்ல மிகவும் அவதியடைகின்றனர்.
ஜெய் சதீஷ் : செண்பகவல்லி நகரில் பாதாள சாக்கடை பிரச்சனையை சரி செய்ய வேண்டும். எனது வார்டில் ஒரு பகுதியில் பைப் லைன் அமைக்கப்பட்டு சாலை போடப்பட்டு விட்டது . இதேபோல் மற்றொரு பகுதியிலும் பைப் லைன் அமைத்து சாலை போட வேண்டும்.
மேயர்: உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோபால் : தேரோடும் நான்கு வீதிகளிலும் தேர் ஓடும் நேரத்தில் சாலை போடப்படுகிறது. ஆனால் அப்போது பாதாள சாக்கடை மேன்ஹோல் அமைப்பு சாலைக்கு கீழே இறங்கி விடுகிறது. எனது வார்டில் எந்த வேலையும் சரி வர நடக்கவில்லை. வேலை செய்யும் காண்ட்ராக்டர்களுக்கு பில் கொடுக்க வேண்டும். 40-க்கும் மேற்பட்ட சந்துகளில் புதியதாக சாலை அமைக்க வேண்டும்.
மேயர்: எந்த சந்துகளின் சாலை இல்லை என்று சொல்லுங்கள். உங்கள் வார்டு பகுதியில் பணிகள் நடந்துள்ளது.
காந்திமதி: பெரியகோயிலில் கிரிவல பாதையை 3 நாட்களில் ஏற்படுத்தி தந்த மேயர் ,துணை மேயர், ஆணையர் உட்பட அனைவருக்கும் நன்றி. தற்காலிக மீன் மார்க்கெட்டில் கழிவுகள் சரிவர அப்புறப்படுத்தப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மேயர்: புதிய மீன் மார்க்கெட்டிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கி விடும். பணிகள் முடிவடைந்ததும் மீன் மார்க்கெட் அங்கு சென்று வரும். அதுவரைக்கும் தற்காலிக மீன் மார்க்கெட்டில் கழிவுகளை உரிய இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்டெல்லா நேசமணி: மிஷன் ஆலமர தெருவில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். அங்கு முதியோர் இல்லம் உள்ளது. அங்குள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு நடக்காமல் இருக்க சாலையோர பூங்கா அமைக்க வேண்டும்.
கேசவன்: எனது 30-வது வார்டில் நிறைய பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து வாய்க்கால்களையும் தூர் வாரவேண்டும்.
மேயர்: வாய்க்கால்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
நீலகண்டன் : 40-வது வார்டில் பள்ளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்கி பெயர் மாற்றம் செய்தது எப்படி? உரிய அனுமதி பெறாமல் ஏன் இந்த மாதிரி செய்தீர்கள் ? வீடு கட்ட ஏன் அனுமதி கொடுத்தீர்கள் ? அப்படி என்றால் என் தீர்மானமாக கொண்டு வரவில்லை.
மாநகராட்சி ஆணையர் கண்ணன்: சென்னை டி.சி.டி.பி அனுமதி அளித்த பிறகு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது இல்லை என தெரியவந்ததால் லேஅவுட்டிற்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக சென்னை நிர்வாகம் தெரிவித்தது. இருந்தாலும் அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானதா என ஆராய்ந்த பிறகு மாநகராட்சி இடம் என்று உறுதியானால் தற்போது நடைபெறும் பணிகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் என்றனர்.
ஆனந்த் : சிவகங்கை பூங்கா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளீர்கள். அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இறப்பு சான்றிதழ் பதிவு செய்தால் எப்போது கிடைக்கும்.
ஆணையர் கண்ணன்: தஞ்சை மாநகராட்சியில் விரைவில் கியூ ஆர் கோடு திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதனை ஸ்கேன் செய்தால் எந்த ஆவணங்கள் எப்போது கிடைக்கும்? சான்றிதழ் பெற யாரை அணுக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் இருக்கும்.
சரவணன் : சீனிவாசபுரம், கிரிரோடு பகுதியில் இரண்டு மழலையர் பள்ளிகள் பகுதியில் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். எரியாமல் உள்ள சோலார் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.
உஷா : 39-வது வார்டில் சிறிய பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டது. அதன் பின்னர் எந்த பணிகளும் நடைபெறவில்லை. மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.