எங்களை இணைக்காதீங்க... எங்களை இணைச்சிடுங்க: மாறுபாடான மனுக்கள் வந்த இடம் எது தெரியுங்களா?
தஞ்சாவூர் மாநகராட்சியுடன் எங்கள் கிராமம் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலை திட்டம் உட்பட அரசு ஏழை மக்களுக்காக அறிவிக்கும் எவ்வித திட்டங்களிலும் நாங்கள் பயன்பெற இயலாது.
தஞ்சாவூர்: எங்களை இணைக்கக்கூடாது... எங்களை இணைக்கணும் ஒரே நாளில் மாறுபாடான இரு மனுக்கள் தஞ்சை கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது. என்ன விஷயம் தெரியுங்களா?
தஞ்சாவூர் அருகே வடகால் மேலவெளி மரவணப்பத்து கிராமத்தை தஞ்சாவூர் மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் சக்கர சம்மந்தம் அருகில் வடகால் மேலவெளி மரவணப்பத்து கிராமத்தை சேர்ந்தவர்கள். இங்கு சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலி வேலை தான் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
விவசாய கூலி வேலை மற்றும் 100 நாள் வேலைக்கு சென்று தான் எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்நிலையில் எங்கள் கிராமத்தை தஞ்சாவூர் மாநகராட்சியுடன் சேர்க்க உள்ளதாக அறிந்தோம். அவ்வாறு தஞ்சாவூர் மாநகராட்சியுடன் எங்கள் கிராமம் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலை திட்டம் உட்பட அரசு ஏழை மக்களுக்காக அறிவிக்கும் எவ்வித திட்டங்களிலும் நாங்கள் பயன்பெற இயலாது.
எனவே எங்கள் கிராமத்தை வடகால் ஊராட்சியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிராம மக்கள் இப்படி மனு கொடுக்க, தஞ்சாவூர் மாநகராட்சியுடன் வெங்கடேஸ்வரா நகர் கிழக்கு மற்றும் மகேஷ் நகர் பகுதியை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி அருகே அமைந்துள்ள வெங்கடேஸ்வரா நகர் கிழக்கு மற்றும் மகேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குடியிருப்போர் நகர் நல சங்க தலைவர் அருணாச்சலம், செயலாளர் மகாதேவன், பொருளாளர் அப்பர்சுவாமி ஆகியோர் தலைமையில் திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
வெங்கடேஷ்வரா நகர் கிழக்கு பகுதியில் 400 குடியிருப்புகளும், ஒருங்கிணைந்த மகேஷ் நகர் பகுதியில் 300 குடியிருப்புகளும் என மொத்தம் 700 குடியிருப்புகள் உள்ளன. இந்த இரண்டு நகர்புற பகுதிகளும் தஞ்சாவூர் மாநகராட்சியை ஒட்டிய பகுதிகளாக அமைந்துள்ளது கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் மற்றும் அலுவலகப் பணிகள் தொடர்பாக பாபநாசம் தாசில்தாரையோ அல்லது அம்மாபேட்டை காவல்நிலையத்தையோ, பாபநாசம் எம்எல்ஏவையோ சந்திக்க வேண்டிய நிலைதான் உள்ளது.
மேலும் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல தஞ்சாவூர் வழியாக தான் சுமார் 30 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த வெங்கடேஸ்வரா நகர் கிழக்கு பகுதி மயிலாடுதுறை நாடாளுமன்றத்திற்குள் அமைவதால் எம்.பி.யை சந்திக்க வேண்டும் எனில் தஞ்சாவூர் வழியாக சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து எங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பகுதி நகர் மயமாகி விட்டதால் ஒருங்கிணைந்த வெங்கடேஸ்வரா நகர் கிழக்கு பகுதி மற்றும் ஒருங்கிணைந்த மகேஷ் நகர் பகுதியை தஞ்சாவூர் மாநகராட்சி உடன் இணைக்க வேண்டும். இதனால் எங்கள் கோரிக்கைகளை நாங்கள் எளிதாக தெரிவித்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே இது குறித்து ஒரே நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியை தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.