நல்ல சமுதாயம் உருவாக இளைய தலைமுறையினரிடம் யாரை கொண்டு போய் சேர்க்க வேண்டும்
நல்ல சமூகம் உருவாக வ.உ.சி. பாரதியை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பாரதி நினைவு நாள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர்: நல்ல சமூகம் உருவாக வ.உ.சி. பாரதியை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் நடைபெற்ற பாரதி நினைவு நாள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் பள்ளியக்ராரம் வெண்ணாற்றங் கரையில் அமைந்துள்ள நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி மற்றும் மக்கள் சிந்தனை பேரவை தஞ்சை நகர வாசகர் வட்டம் இணைந்து பாரதி நினைவு நாள் கருத்தரங்கை நடத்தின.
கப்பலோட்டிய கதை தலைப்பில் சிறப்புரை
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவையின் துணைத்தலைவர் முனைவர் கோ.விஜய ராமலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். வ.உ..சி. ஆய்வு வட்ட தமிழ்நாடு செயலாளர் குருசாமி மயில்வாகனன், கப்பலோட்டிய கதை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கருத்தரங்கில் இன்றைய இளைய சமுதாயம் இளைஞர்கள் முதல் மாணவர்கள் வரை மனம்போன போக்கிலே, பல்வேறு கலாச்சார சீரழிவிலே, சமூக கருத்துக்கள், பார்வைகள் இல்லாது வழி தவறி சென்று கொண்டிருக்கின்றனர். 200 ஆண்டுகால பிரிட்டிஷ் வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்காக முழுமையாக தம்மை அர்ப்பணித்து உயிர் நீத்த தியாகச் செம்மல்கள் பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள்.
பிரிட்டிஷாரை கதி கலங்க வைத்த பாரதியார்
இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு சவால் விட்டு கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு, தனது கவிதை வரிகளால் பிரிட்டிஷாரை கதி கலங்க வைத்த பாரதியாரையும் இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்த்து, அவர்களை நல்வழிப்படுத்துவதுடன் நல்ல சமுதாயத்தையும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆதலால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யையும், பாரதியாரையும் வருங்கால தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநகர மாவட்ட செயலாளர் பி.ஜி.இராஜேந்திரன், பெரியாரியல் ஆய்வாளர் பசு.கௌதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் நா. பெரியசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் பொறியாளர் வி.விடுதலைவேந்தன் ஒருங்கிணைத்தார்.
சுப்பிரமணியன் எப்படி பாரதியானார்
சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.
இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை பாராட்டி 'பாரதி' என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.