இனியாச்சும் கொடுக்கணும்: கலெக்டரிடம் வழங்கப்பட்ட மனுவில் என்ன சொல்லியிருக்காங்க?
600க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, இந்த கூட்டுறவு கடன் சங்கம் ஐந்தரை கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பல ஆண்டுகளாக வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் தங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பிற வங்கிகளிடமிருந்து கடன் வாங்கித் தரும் பணி மேற்கொள்கிறது. இதற்காக கடன் பெறும் உறுப்பினர்கள் தங்கள் வாங்கும் கடன் தொகையில் 10 சதவீதத்தை சேமிப்பு தொகையாக கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்திருப்பது வழக்கம். இவ்வாறு 600க்கும் மேற்பட்ட, முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக துப்புரவு பணியை செய்த, துப்புரவு பணியாளர்களுக்கு, இந்த கூட்டுறவு கடன் சங்கம் ரூ,ஐந்தரை கோடி நிலுவைத் தொகையை பல ஆண்டுகளாக வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது.
மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் துப்புரவு பணியாளர்கள் சேமிப்பு தொகையை, தஞ்சாவூர் மாநகராட்சி தனது சொந்த தேவைக்காக தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது, விதிகளுக்கு புறம்பானது.
இது துப்புரவு பணியாளர்களின் நலனுக்கு எதிரானது. எனவே அந்த தொகை முழுவதும் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிலுவையில் உள்ள துப்புரவு பணியாளர்கள் பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை பற்றிய பட்டியலை பார்வைக்கு வழங்க உத்தரவு இட வேண்டும். நம் நகரை 30 ஆண்டுகள் முகம் சுழிக்காமல் தூய்மைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள, தூய்மை பணியாளர்களின் உழைப்பை, அதன் பயனை உடன் வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.
எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மட்டியூர், மாவத்திருப்பு, வாண்டையார் இருப்பு உட்பட ஏழு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நாங்கள் திருவிடைமருதூர் தாலுகா மட்டியூர், மாவத்திருப்பு, வாண்டையார் இருப்பு, உக்கரை பரவனூர், கடம்பங்குடி, மாராச்சேரி ஆகிய ஏழு கிராமங்களை சேர்ந்தவர்கள் . இந்த கிராமங்களில் 1500 குடும்பங்களில் சுமார் 6000 திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம்.
கும்பகோணம் - சென்னை தேசியநெடுஞ்சாலையில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கு செல்வதற்கு பொதுவாக பயன்படுத்தி வந்த சாலை தற்போது நெடுஞ்சாலை வேலை காரணமாக நிரந்தரமாக அடைக்கப்பட்டு விட்டது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலைய வாகனம் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் போன்றவை இந்த சாலை வழியாக சென்று வந்தன.
மேலும் மட்டியூர் ஆதிதிராவிடர் தெரு, மாராச்சேரி குடியானத்தெரு, மற்றும் ஆதிதிராவிடர் தெரு மூன்று கிராமங்களுக்கும் சுடுகாடு செல்வதற்கு நீண்ட காலமாக இந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாதை மூடப்பட்டால் மாற்று சமூக மக்கள் வசிக்கும் வழியாக எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் சாதிப்பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே திருப்பனந்தாள் முதல் மேற்கண்ட 7 கிராமங்களுக்கு செல்ல ஏற்கனவே நாங்கள் பயன்படுத்தி வந்த சாலையை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.