மாநகராட்சியுடன் இணைத்தால் பாதிப்பு ஏற்படும்... ராமநாதபுரம் ஊராட்சி மக்கள் கலெக்டரிடம் மனு
ராமநாதபுரம் ஊராட்சியை இணைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்து பொதுமக்கள் தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சியுடன் ராமநாதபுரம் ஊராட்சியை இணைத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே ராமநாதபுரம் ஊராட்சியை இணைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்து பொதுமக்கள் தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ராமநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாகோபிநாத் தலைமையில் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் ஒரு மனுவை அளித்தனர். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சை அருகே உள்ளது ராமநாதபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியை சேர்ந்த மக்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள். இந்த ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்கப்போவதாக தெரிய வந்தது. இப்படி இணைத்தால் எங்களது கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும். இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் வரும் ஊதியத்தை நம்பியே இந்த ஊராட்சியை சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இதனால் எங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். மாநகராட்சியுடன் இணைத்தால் வீட்டுவரி, தண்ணீர் வரி உயரும். இவற்றை கட்டுவதற்கு மிகுந்த சிரமம் உருவாகும். குடிநீர் இணைப்பு வழங்குவதிலும், சாலைகளை பராமரிப்பதிலும் தாமதம் ஏற்படும். நியாய விலைக்கடைகளில் பொருட்களை பெறுவதிலும் பல்வேறு சிரமங்களை நாங்கள் சந்திக்க நேரிடும். மேலும் அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதிலும் சிக்கல்கள் உருவாகும் நிலை உள்ளது.
பொதுமக்கள் தங்களது தேவைக்காக தஞ்சையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு தான் வர வேண்டி இருக்கும். எனவே தற்போது உள்ளது போல ஊராட்சி மன்றம் மூலமே செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ராமநாதபுரம் ஊராட்சி பொதுமக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.