தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்களை தீவிர சோதனை நடத்தி அனுப்பும் போலீசார்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களிடம் போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களிடம் போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார்
முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மனுக்கள் அளித்தனர்.
குறைதீர்க்கும் முகாமில் மனு அளிக்க வந்த அனைவரையும் கலெக்டர் அலுவலக வாயிலில் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். ஆண்கள், பெண்கள் என அனைவரையும் நிறுத்தி அவர்கள் கொண்டு வந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். மேலும் பொதுமக்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்களையும் போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. அதேபோல் விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் என பல்வேறு கூட்டங்கள் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இம்மாவட்டத்தின் கிராமப்பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுப்பது வழக்கம். கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் திங்கட்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மனு கொடுக்க வரும் பொதுமக்களில் சிலர், மண்எண்ணெய், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களுடன் வந்து அதிகாரிகள் முன்னிலையில் தங்கள் மீது ஊற்றி கொள்ளும் சம்பவம் நடக்கிறது.
இதை தடுக்க பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழையும் முன்பே வாயில் கேட்டில் போலீசார் அவர்களை தீவிர சோதனை நடத்திய பின்னரே அனுப்புகின்றனர். இவ்வாறு போலீசார் தங்கள் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக கலெக்டர் அலுவலக நுழைவாயில் கேட் பகுதியில் காவல் உதவி மையம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.