Thanjavur: கல்லணை உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரிக்கு அனுமதி - ரத்து செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
கல்லணை உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரிக்கு தமிழக அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்: கல்லணை உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரிக்கு தமிழக அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க துணைத்தலைவர் ஜீவக்குமார் தலைமையில் பொன்னுராமன், பாலகணேசன், உமர்முக்தார், ராஜேந்திரன், சங்கர் மற்றும் பலர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நீர்வளத்துறை மற்றும் கனிமவளத்துறைக்கு தமிழக அரசு 25 இடங்களில் மணல் குவாரிகளை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. நிலத்தடி நீருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து ஏற்படுத்தும் வகையில் மணல் குவாரிகள் இயக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அளவைவிட ஆறுகளில் பெரிய குழிகள் தோண்டப்படுகின்றன. மணல் அள்ளப்படுகிறது. ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன உயர்நீதிமன்றத்திலும் இவை குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழக அரசின் இப்போதைய அறிவிப்புப்படி காவிரி, கொள்ளிடம், வைப்பாறு. வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் 25 ராட்சத மணல் குழிகள் ஓட்டை போட்டு திறக்கப்படுகின்றன 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டி எடுக்க அனுமதி தரப்படுகிறது.
தமிழகம் தன் கனிமவளத்தை இழந்து ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் வற்றி காணப்படுகின்றன. இதனால்தான் கல் குவாரிகளில் எம்.சாண்ட் எனப்படும் நொறுக்கப்பட்ட கல் மணல் விற்பனை தமிழகத்தில் துவக்கப்பட்டது. மலேசியாவிலிருந்து மண் இறக்குமதி நடந்தது. இந்த நிலையில் மீண்டும் மணல் குவாரிகள் திறப்பதும் அவற்றில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதும் சட்ட விரோதமான கொள்ளைக்கு சட்டப்பூர்வமான லைசென்ஸ் வழங்குவதாகும்.
மணல் குவாரிக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் கல்லணையும் இடம் பெற்றுள்ளது. கல்லணை பாசன வரலாற்றில் தமிழகத்தின் அடையாளம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லணைக்கு இதுவரை யாரும் ஊறு நினைத்ததில்லை. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற கல்லணைக்கு ஒரு ஆபத்து நேர்வது மனிதகுல நாகரிகத்துக்கு இழுக்காகும்.
முக்கொம்பு பாலம் அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டது. அது வெறும் செய்திதான். கல்லணையோ ஒரு வரலாறு. மேலும் கல்லணைக்கு தேவை பராமரிப்புதான். அதன் அருகில் குழி தோண்டுவது அல்ல. முன்பே கல்லணையில் மணல் அரிப்பும் சரிவும் ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலேயே பொறியாளர் ஆர்தர் காட்டன் வியந்து பிரமித்த கல்லணைக்கு ஏற்படும் பாதிப்பு ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் கேடு தரும். எனவே கல்லணை உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரி திறக்க அரசு வழங்கிய அனுமதியை திரும்ப பெற கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.