தூய்மைப்பணியாளருடன் சமபந்தி விருந்து... பெருமிதத்துடன் பங்கேற்ற திமுக அமைச்சர்
கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல் பொது மக்களுக்காக அளப்பரிய சேவைகள் புரிந்தவர்கள் தூய்மை பணியாளர்கள்தான்.
தஞ்சாவூர்: அம்பேத்கார் நினைவு தினத்தை ஒட்டி தஞ்சை அருகே வல்லத்தில் தூய்மை பணியாளர்களுடனான சமபந்தி நிகழ்ச்சி நடந்தது.
தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சியில் சட்டமேதை அண்ணல் அம்பேத்காரின் 68வது நினைவு நாளைமுன்னிட்டு நேற்று வல்லம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுடனான சமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாஹின் அபூபக்கர் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமை வகித்து பேசியதாவது: பல மாநிலங்களுக்கு முன்னோடியாகவே தமிழகத்தில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி உள்ளன. அம்பேத்கார் நாணயம் வெளிவர பாடுபட்டவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். தூய்மைப் பணியாளர்கள் தூய்மை உள்ளம் கொண்டவர்கள். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் என்பவர்கள் தூய்மை காவலர்கள் என்று முதலமைச்சர் போற்றி உள்ளார். கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல் பொது மக்களுக்காக அளப்பரிய சேவைகள் புரிந்தவர்கள் தூய்மை பணியாளர்கள் தான். தூய்மை பணியாளர்களுடன் சமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒன்றாக உணவு அருந்தும் நிகழ்ச்சி என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எம்.எல்.ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார், மேயர்கள் தஞ்சை சண்.ராமநாதன், கும்பகோணம் சரவணன், வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருளானந்தசாமி, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், கவுன்சிலர்கள் சிங்.இரா.அன்பழகன், சுந்தர்ராஜூ, ஆரிப்பாட்சா, ரெளலத்நிஷாஷாபி, திமுக நகர செயலாளர் கல்யாணசுந்தரம், துணை செயலாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.