தஞ்சாவூரில் மளிகைக்கடையில் தீ விபத்து... ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து சாம்பல்
தஞ்சாவூரில் மின் கசிவு காரணமாக மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து சேதம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று மதியம் மின் கசிவு காரணமாக மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே காவேரி நகர் பகுதியில் முருகன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி வரை கடையை திறந்து வைத்திருந்துள்ளார். நள்ளிரவு வரை வியாபாரம் செய்துவிட்டு கடை மூடியுள்ளார். அப்போது மின்சாரம் இல்லாததால் கடையை மூடி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் மின்சாரம் வந்துள்ளது. அப்போது மின்கசிவு ஏற்பட்டு சிறிது சிறிதாக பொருட்கள்எரியத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அந்த மளிகைக்கடையில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் சிறிது சிறிதாக வந்த புகை அதிகளவில் வர தொடங்கி உள்ளது. உடன் தண்ணீர் ஊற்றி பொதுமக்கள் அணைக்க முற்பட்டனர். இதற்கிடையில் தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
இருந்தபோதிலும் மளிகை கடையில் இருந்த இரண்டு பிரிட்ஜ் மற்றும் மளிகை பொருட்கள் முழுமையாக எரிந்து சேதம் தீ விபத்து குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. தீபாவளியன்று மதியம் இந்த தீவிபத்து நடந்தது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.